தொழில்நுட்பம்
உறைய வைக்காத ஐஸ் கண்டுபிடிப்பு: 20,000 மடங்கு அழுத்தத்தில் நீரின் புதிய வடிவம்!
உறைய வைக்காத ஐஸ் கண்டுபிடிப்பு: 20,000 மடங்கு அழுத்தத்தில் நீரின் புதிய வடிவம்!
இதுவரை ஃப்ரிட்ஜில் மட்டுமே உருவாகும் என நாம் நம்பிய பனிக்கட்டி, இனி புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. ஆம், விஞ்ஞானிகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில், குளிர்விக்கப்படாமல், அறை வெப்பநிலையில் (Room Temperature) பிரம்மாண்டமான அழுத்தம் மூலம் உருவாகும் புதிய வகைப் பனிக்கட்டியைக் கண்டுபிடித்துள்ளனர்.ஜெர்மனியில் உள்ள ஐரோப்பிய எக்ஸ்ஃபெல் (European XFEL) ஆய்வாளர்கள் குழு, பூமியில் அதிகம் ஆய்வு செய்யப்பட்ட பொருளில் ஒன்றான நீரின் மறைக்கப்பட்ட ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளது.அவர்கள் சாதாரண தண்ணீரை வைரத்தாலான சிறியஅறையில் வைத்து வளிமண்டல அழுத்தத்தைவிட சுமார் 20,000 மடங்கு அதிக அழுத்தம் (2 ஜிகாபாஸ்கல்ஸ்) கொடுத்தனர். அங்குதான் அதிசயம் நிகழ்ந்தது. வெப்பநிலை மாற்றம் இன்றி, நீர் மூலக்கூறுகள் மறுசீரமைக்கப்பட்டு, இதற்கு முன் பார்த்திராத படிக அமைப்பைக் கொண்ட திடப்பொருளாக மாறியது.இது வெறும் ஐஸ் அல்ல… ‘ஐஸ் XXI’வழக்கமான பனிக்கட்டிகள் அறுங்கோண (Hexagonal) வடிவில் உறைபவை. ஆனால், புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 21வது வகைப் பனிக் கட்டி ‘ஐஸ் XXI’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, சாதாரண பனிக்கட்டியை விட அடர்த்தியான மற்றும் அதிக நிலைப்புத் தன்மை கொண்ட நாற்கோண (Tetragonal) படிக அமைப்பைக் கொண்டுள்ளது. வழக்கமாக பனிக்கட்டி உருவாக, நீரின் வெப்பநிலையைக் குறைக்க வேண்டும். ஆனால், ‘ஐஸ் XXI’ உருவாக, நீரின் வெப்பநிலையை மாற்றவே இல்லை. அழுத்தம் மட்டுமே இதைத் திடநிலைக்கு மாற்றியது.விஞ்ஞானிகள் இந்த ஆய்வில், அழுத்தத்தின் வேகத்தைப் பொறுத்து, நீர் திடப்பொருளாக மாற 5 வெவ்வேறு வழிகளைப் (Freezing Pathways) பயன்படுத்துவதை கண்டறிந்தனர். இதன் மூலம், நீர் ஒரே ஒரு வழியில் மட்டுமே உறைந்து திடமாகும் என்ற நீண்ட காலக் கூற்று உடைக்கப்பட்டு உள்ளது.பூமிக்கு அப்பால், வியாழனின் துணைக்கோளான கனிமீட் அல்லது சனியின் நிலவான டைட்டன் போன்ற பனிக்கட்டிகள் நிறைந்த நிலவுகளின் ஆழத்தில், நீர் எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ‘ஐஸ் XXI’ உதவும். இந்த உயர் அழுத்தச் சூழலில், நம் பிரபஞ்சத்தில் உள்ள நீர்வளம் கொண்ட வெளிக்கோள்களின் (Exoplanets) மர்மங்களை அவிழ்க்க இது முக்கிய சாவியாக இருக்கலாம்.