இலங்கை
கிளிநொச்சியில் இன்று சர்வதேச முதியோர் தினம் !
கிளிநொச்சியில் இன்று சர்வதேச முதியோர் தினம் !
வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், சர்வதேச முதியோர் தினம் மற்றும் முதியோருக்கான ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்டல் முகாம் இன்று 17ஆம் திகதி காலை 9.00 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவுக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தனுஜா லுக்ஷாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சரும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் “ஆரோக்கியமான முதுமை” எனும் தொனிப்பொருளில் தொற்றா நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், ஆரோக்கியமான உணவு, தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு, உதவி உபகரணங்கள் வழங்குதல் முதலான செயற்பாடுகள் நடைபெற்றன. மேலும் முதியவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் கௌரவிப்புக்கள் முதலான நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகவாணிபமும் அமைச்சின் செயலாளர் முத்துலிங்கம் நந்தகோபாலன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். டி. எம். ஏ. கே. டிசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் இலச்சுமணன் இளங்கோவன் கலந்து கொண்டார், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகங்களின் உதவிப் பிரதேச செயலாளர்கள், கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர், வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத் தின் தலைமைப் பீட உத்தியோகத்தர்கள், மாவட்ட உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் முதியோர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.