தொழில்நுட்பம்

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்தது? ஆதி ரகசியத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

Published

on

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்தது? ஆதி ரகசியத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

நாம் வசிக்கும் பூமி, நிலவு உருவாவதற்கு முன்பு எப்படி இருந்தது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பிரமாண்ட மோதல், நமது கிரகத்தின் ஆரம்ப வடிவமான ‘ஆதிப் பூமி’ (Proto-Earth)-ஐ முற்றிலுமாக மாற்றி, இன்று நாம் பார்க்கும் உலகையும் நிலவையும் உருவாக்கியது. இந்த அழிவுகரமான நிகழ்வு, ஆதிப்பூமியின் தடயங்கள் அனைத்தையும் அழித்திருக்க வேண்டும் என்று தான் விஞ்ஞானிகள் இத்தனை காலமும் நம்பினர். ஆனால், இப்போது ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் (MIT) சேர்ந்த ஆய்வாளர்கள், பூமியின் மிகப் பழமையான பாறைகளின் ஆழத்தில், ஆதிப் பூமியின் மூலக்கூறுகள் இன்றும் கிட்டத்தட்ட எந்த மாற்றமும் இன்றிப் பாதுகாக்கப்பட்டிருப்பதற்கான முதல் நேரடி ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது, நிலவு உருவாகும் பேரழிவு மோதலுக்கு முன்பிருந்த புவியின் ‘கைரேகை’ என்று கூறப்படுகிறது.விஞ்ஞானிகள் இப்பழமையான பாறைகளை ஆய்வு செய்தபோது, நுட்பமான ரசாயன முரண்பாட்டைக் கண்டறிந்தனர். அதாவது, பாறைகளில் பொட்டாசியம்-40 என்ற ஒரு குறிப்பிட்ட ஐசோடோப்பு (அணுவின் மாறுபட்ட வடிவம்) குறைந்த அளவில் இருந்தது. எம்.ஐ.டி.பேராசிரியர் நிகோல் நீ தலைமையிலான ஆய்வுக் குழு, இந்த பற்றாக்குறைதான் ஆதிப் பூமியின் ஆழமான மேலோட்டின் (Proto-Earth Mantle) எச்சமாக இருக்கலாம் என்று வாதிடுகிறது. மாபெரும் மோதலுக்கு முன்பிருந்த மிக மிகப் பழமையான பூமியின் ஒரு துண்டை நாங்க பார்க்கிறோம் என்று நிகோல் நீ ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறார்.பொதுவாக, இப்படிப்பட்ட அசல் தடயங்கள், பூமிக்குள் ஏற்படும் பல்வேறு புவியியல் மாற்றங்களால் பில்லியன் ஆண்டுகளில் மெதுவாக அழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆதித் தடயங்கள், கனடா, கிரீன்லாந்து மற்றும் ஹவாய் எரிமலைகளில் இருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளில் பாதுகாக்கப்பட்டிருப்பது வியக்க வைக்கிறது. இந்தச் சிறிய சமிக்ஞையை உறுதிப்படுத்த, விஞ்ஞானிகள் பாறைகளைத் தூளாக்கி, அமிலத்தில் கரைத்து, அதிநவீன கருவிகளைக் கொண்டு பொட்டாசியம் ஐசோடோப்புகளின் விகிதங்களை துல்லியமாக அளவிட்டனர்.மேலும், விண்கல் தாக்கம் மற்றும் எரிமலை செயல்முறைகள் போன்ற இயற்கையான நிகழ்வுகளால் இந்தக் குறைபாடு ஏற்பட்டதா என்பதை அறிய கணினி உருவகப்படுத்துதல்களைச் (Computer Simulations) செய்தனர். ஆனால், உருவகப்படுத்தப்பட்ட எந்தக் காட்சியும், பாறைகளில் இருந்ததைப் போன்ற துல்லியமான பொட்டாசியம்-40 பற்றாக்குறையைக் காட்டவில்லை. விஞ்ஞானிகளின் முடிவின்படி, இந்த ஐசோடோப்புப் பற்றாக்குறை, சந்திரன் உருவாகக் காரணமான மோதலின்போது கலக்காமல் தப்பிய, பழமையான ஆதிப் பூமியின் மேலோடு இன்றும் நமது கிரகத்தின் ஆழத்தில் மறைந்திருப்பதை நிரூபிக்கிறது.இந்த கண்டுபிடிப்புக்கு முன்பு, விஞ்ஞானிகள் பூமியின் அசல் இரசாயன அமைப்பை அறிய விண்கற்களின் தரவுகளையே நம்பியிருந்தனர். ஆனால், “தற்போதுள்ள விண்கல் தரவுகள் முழுமையானவை அல்ல. நமது கிரகம் எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது,” என்று நிகோல் நீ சுட்டிக் காட்டினார். ஆகவே, நமது பூமிக்குள் புதைந்திருக்கும் இந்த ஆதிப் பூமியின் எச்சங்கள், ஆரம்பகால பூமி மற்றும் அதன் அண்டை கிரகங்கள் எப்படி இருந்தன என்பதற்கான அரிய இரகசியங்களைத் தாங்கி நிற்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version