தொழில்நுட்பம்
அண்டார்டிகாவின் பனி உருகும் வேகம் 4 மடங்கு அதிகரிப்பு… விஞ்ஞானிகள் அதிர்ச்சி!
அண்டார்டிகாவின் பனி உருகும் வேகம் 4 மடங்கு அதிகரிப்பு… விஞ்ஞானிகள் அதிர்ச்சி!
அண்டார்டிகாவின் உறைபனி நிலைத் தன்மை உலகளாவிய வெப்பமயமாதலின் அழுத்தத்தால் உடைகிறது. கிரீன்லாந்தில் காணப்பட்டதைப் போன்றே பனி மேற்பரப்பு உருகுதல், பனிப்பாறை முடுக்கம் மற்றும் கடல் பனியின் சுருக்கம் போன்ற அபாயகரமான அறிகுறிகள் இப்போது தென் துருவத்திலும் தென்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.ஒரு காலத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாகக் கருதப்பட்ட அண்டார்டிகாவில், வெப்பநிலை உயர்வு மிக விரைவான பனி இழப்பைத் தூண்டுகிறது என்பதை நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது. டேனிஷ் வானிலை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ரூத் மோட்ரம், “அண்டார்டிகாவில் எந்த விதமான காலநிலை தாக்கங்கள் ஏற்படுவதற்கும் மிக நீண்ட காலம் ஆகும் என்று நாங்க நினைத்தோம். ஆனால் அது உண்மையல்ல,” என்று கூறியுள்ளார்.அண்டார்டிகாவின் பனிப் படலம் சுமார் 54 லட்சம் சதுர மைல்கள் பரவியுள்ளது. இதில் உள்ள மொத்த பனியும் உருகினால், உலகளவில் கடல் மட்டம் 190 அடி 58 மீட்டர் வரை உயரும் அபாயம் உள்ளது. குறிப்பாக, மேற்கு அண்டார்டிக் பனிப் படலம் மட்டும் உருகினால், கடல் மட்டம் 10 அடிக்கும் மேல் உயரும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.சாதனை வெப்பமான கோடைகாலங்களைத் தொடர்ந்து, 2002-ம் ஆண்டில் லார்சன் பி (Larsen B) பனி அடுக்கு திடீரெனச் சரிந்தது முக்கியத் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. ஸ்கிரிப்ஸ் கடல்சார் கல்வி நிறுவனத்தை சேர்ந்த ஹெலன் அமண்டா ஃபிரிக்கர் கூற்றுப்படி, 1990-களுக்கு பிறகு பனி இழப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பலவீனமடைந்த பனி அடுக்குகள், வேகமாக நகரும் பனிப்பாறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன. “ஒரு கட்டத்தில், இதை நிறுத்த முடியாது,” என்றும் அவர் எச்சரிக்கிறார்.மிகவும் நிலையானது எனக் கருதப்பட்ட கிழக்கு அண்டார்டிக் பனிப் படலத்தின் ஆழமான பகுதிகளிலும் 2022-ம் ஆண்டில் அசாதாரண வெப்ப அலை பரவியதை ஆய்வாளர் மோட்ரம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிகழ்வுக்குத் தீவிரமான வளிமண்டல ஆறுகளே காரணம்.மேலும், விஞ்ஞானிகளின் சமீபத்திய செயற்கைக்கோள் ஆய்வுகள், வெப்பமான கடல் நீரோட்டங்கள் அண்டார்டிகாவின் பாதுகாப்பு நீரோட்டத்தைத் தாண்டி, பனி அடுக்குகளின் அடிப்பகுதியை வெப்பமடையச் செய்வதைக் காட்டுகின்றன.கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எரிக் ரிக்னாட் கூற்றுப்படி, “கிரீன்லாந்திற்குப் பொருந்தும் புதிய இயற்பியல் எதுவும் அண்டார்டிகாவிற்கு இல்லை, அல்லது அதற்கு நேர்மாறாகவும் இல்லை.” கிரீன்லாந்தில் ஏற்படும் பனி உருகும் நிகழ்வுகள் அண்டார்டிகாவிலும் எதிர்காலத்தில் நிகழலாம் என்பதை இது குறிக்கிறது. மோட்ரம் எச்சரிக்கையில், அண்டார்டிகா இனி தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், “அங்கு நடப்பது உலகின் மற்ற காலநிலை அமைப்புகளைப் பாதிக்கும்,” என்றும் வலியுறுத்தியுள்ளார்.இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதன் அவசரத் தேவையை வலியுறுத்துகின்றன. “இந்தச் சிக்கலில் இருந்து நாம் வெளியே வர ஒரே வழி, நமது பசுமை இல்ல வாயுக்களைக் கூடிய விரைவில், முடிந்தவரை குறைப்பதுதான்,” என்ற அவசர வேண்டுகோளுடன் ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையை முடிக்கிறார்கள்.