இலங்கை
இலங்கை முழுவதும் 36,178 ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்!
இலங்கை முழுவதும் 36,178 ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்!
இலங்கை முழுவதும் உள்ள மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் மொத்தம் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக, கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கமைய, தேசிய பாடசாலைகளில் 1,501 வெற்றிடங்களும், மாகாண பாடசாலைகளில் 34,677 வெற்றிடங்களும் உள்ளதாக குறிப்பிட்டார். மாகாண ரீதியில் பார்க்கும்போது, மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 6,318 வெற்றிடங்களும், வடக்கில் 1,568 வெற்றிடங்களும், வடமேல் மாகாணத்தில் 3,271 வெற்றிடங்களும், கிழக்கில் 4,630 வெற்றிடங்களும் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தேசிய பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், வெளிநாட்டு மொழிகள், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்காகவும் உயர்தர வகுப்புகளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நிலவும் வெற்றிடங்களுக்காக கடந்த 2024 ஜூலை 28ஆம் திகதி முதல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய எதிர்வரும் 2 மாதங்களில் 353 பட்டதாரிகளும் ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அசிரியர் சேவையில் நிலவும் வெற்றிடங்களை முழுமையாக நிரப்புவதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு மதிப்பாய்வு குழுவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்து வெற்றிடங்களை நிரப்புவதற்காக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.