இலங்கை
மருந்துப் பற்றாக்குறைக்கு உடன் தீர்வுகாணுங்கள்!
மருந்துப் பற்றாக்குறைக்கு உடன் தீர்வுகாணுங்கள்!
அரச மருத்துவமனைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறைக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின்கீழான வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதி மீதான விவாதத்தின்போது, அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மருத்துவமனைகளில் மருந்துப் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இலவசச் சுகாதார சேவையை மாத்திரம் நம்பியுள்ள பெரும்பாலான மக்கள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இலவச கல்வி மற்றும் இலவசச்சுகாதாரம் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசியமானது. அரச மருத்துவமனைகளில் மருந்துப்பொருள்களுக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. மருந்துக்கொள்வனவில் காணப்படும் தாமதம் மற்றும் முறைகேடுகள் மருந்துத் தட்டுப்பாட்டுக்குப் பிரதான காரணியாக உள்ளன. ஆகவே இலத்திரனியல் முறைமையிலான விலைமனுக்கோரலுடனான மருந்துக் கொள்வனவை அறிமுகப்படுத்தவேண்டும். இதற்குரிய மனித மற்றும் பௌதீக வளங்களை அரசாங்கம் வழங்கவேண்டும்- என்றார்.