வணிகம்
எல்லா வங்கிக்கும் இதுதான் ரூல்; உங்க பணத்துக்கு அதிக பாதுகாப்பு: நவம்பர் 1-ல் அதிரடியாக மாறும் வங்கி விதிமுறைகள்
எல்லா வங்கிக்கும் இதுதான் ரூல்; உங்க பணத்துக்கு அதிக பாதுகாப்பு: நவம்பர் 1-ல் அதிரடியாக மாறும் வங்கி விதிமுறைகள்
வங்கி சட்டத்திருத்த சட்டம், 2025-ன் கீழ், வங்கிக் கணக்குகளுக்கான புதிய நாமினேஷன் (வாரிசு நியமனம்) விதிகள் நவ.1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. திருத்தப்பட்ட இந்த வழிகாட்டுதல்களின்படி, வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் பணத்தின் மீது அதிக நெகிழ்வுத் தன்மையையும் கட்டுப்பாட்டையும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளன என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.புதிய விதியின்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள், நிரந்தர வைப்பு நிதிகள் (Fixed Deposits), லாக்கர்கள் மற்றும் பாதுகாப்பான கையிருப்புப் பொருட்களுக்கு 4 நாமினி வரை நியமிக்க முடியும்.புதிய விதிகளின் முக்கிய நோக்கங்கள்நாமினேஷன் செயல்முறையை எளிமையாக்குதல், வெளிப்படைத்தன்மை மற்றும் அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியான நடைமுறையை உறுதி செய்தல் ஆகியவை இந்த புதிய விதிகளின் நோக்கங்களாகும். இது, உரிமைகோரல் தீர்வைக் (Claim Settlement) வேகப்படுத்துவதையும் வைப்புதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சிறந்த பாதுகாப்பை அளிப்பதையும் உறுதி செய்கிறது.”வங்கி சட்டத்திருத்தம் சட்டம், 2025 ஏப்.15 அன்று அறிவிக்கப்பட்டது. இது இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934, வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 உள்ளிட்ட 5 சட்டங்களில் மொத்தம் 19 திருத்தங்களைக் கொண்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் பிரிவுகள் 10, 11, 12 மற்றும் 13 ஆகியவை நவ.1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்பிரிவுகள் வைப்புக் கணக்குகள், பாதுகாப்பான கையிருப்பில் உள்ள பொருட்கள் மற்றும் வங்கி லாக்கர்களின் உள்ளடக்கம் தொடர்பான நாமினேஷன் வசதிகளைப் பற்றியவை ஆகும்.புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்பல நாமினிகள் (Multiple Nominations): வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் அல்லது அடுத்தடுத்து என 4 நபர்கள் வரை நாமினியாக நியமிக்கலாம். இது வைப்புதாரர்களுக்கும் அவர்களின் நாமினிகளுக்கும் உரிமைகோரல் தீர்வை எளிதாக்குகிறது.வைப்புக் கணக்குகளுக்கான நாமினேஷன்: வைப்புதாரர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரே நேரத்தில் (Simultaneous) அல்லது அடுத்தடுத்து (Successive) நாமினிகளைத் தேர்வு செய்யலாம்.பாதுகாப்பான கையிருப்பு மற்றும் லாக்கர்களுக்கான நாமினேஷன்: இந்த வசதிகளுக்கு அடுத்தடுத்து நியமனம் (Successive Nomination) மட்டுமே அனுமதிக்கப்படும்.ஒரே நேரத்தில் நியமனம் (Simultaneous Nomination): வைப்புதாரர்கள் 4 பேர் வரை நியமித்து, ஒவ்வொரு நாமினிக்கும் சேர வேண்டிய பங்கு அல்லது சதவீதத்தை குறிப்பிடலாம். மொத்தப் பங்கு 100% இருக்க வேண்டும். இது அனைத்து நாமினிகளுக்கும் இடையில் வெளிப்படை விநியோகத்தை உறுதி செய்கிறது.அடுத்தடுத்து நியமனம் (Successive Nomination): வைப்பு நிதிகள், பாதுகாப்பான கையிருப்பு அல்லது லாக்கர்களைப் பயன்படுத்துபவர்கள் 4 நாமினிகள் வரை குறிப்பிடலாம். இதில், முதலாவதாக நியமிக்கப்பட்டவர் இறந்தால் மட்டுமே அடுத்த நாமினிக்கு உரிமை கிடைக்கும். இது தொடர்ச்சியான தீர்வை உறுதிசெய்து, வாரிசுரிமையில் தெளிவை அளிக்கிறது.இந்த விதிகள் அமலாவதன் மூலம், வைப்புதாரர்கள் தங்கள் விருப்பப்படி நாமினேஷன் செய்ய நெகிழ்வுத்தன்மை கிடைப்பதுடன், வங்கி அமைப்பு முழுவதும் உரிமைகோரல் தீர்வு ஒரே மாதிரியாகவும், வெளிப்படையாகவும், திறமையாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. நாமினேஷன் செய்வதற்கான செயல்முறை மற்றும் படிவங்களைத் தெளிவுபடுத்தும் வங்கி நிறுவனங்கள் (நாமினேஷன்) விதிகள், 2025 விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.