இந்தியா
இந்தூரில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவருக்கு பாலியல் துன்புறுத்தல் – பி.சி.சி.ஐ கண்டனம்
இந்தூரில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவருக்கு பாலியல் துன்புறுத்தல் – பி.சி.சி.ஐ கண்டனம்
இந்தூரில் தங்கள் ஹோட்டலில் இருந்து ஒரு காஃபி கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் இரண்டு வீராங்கனைகள் பின் தொடரப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு, இந்தியாவில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அரங்கேறியுள்ளது.இந்த சம்பவம் வியாழக்கிழமை காலை, வீராங்கனைகள் தங்கியிருந்த ராடிசன் ப்ளூ ஹோட்டலுக்கு அருகிலுள்ள காஜ்ரானா சாலைப் பகுதியில் நடந்தது. ஹோட்டலில் இருந்து காஃபி கடைக்கு நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்களில் ஒருவரை முறையற்ற விதத்தில் தொட்டுவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.வீராங்கனைகளில் ஒருவர் தனது அணிப் பாதுகாப்பு மேலாளர் டேனி சிம்மன்ஸுக்கு உடனடியாக அபாய எச்சரிக்கையுடன் கூடிய லைவ் லொக்கேஷன் அறிவிப்பை அனுப்பியுள்ளார். சிறிது நேரத்திலேயே அவர் சிம்மன்ஸை அழைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஆபத்தான முறையில் நெருங்கி வந்து தங்களை தொட முயன்றதாகவும், தாங்கள் எதிர்த்ததால் அவர் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அடையாளம் தெரியாத நபர் குறித்த தகவலின் பேரில், அருகில் இருந்த ஒருவர் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணைக் குறித்து வைத்திருந்ததால், போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். குற்றவாளியான அகில் கான் என்பவர் வியாழக்கிழமை இரவு தாமதமாகக் கைது செய்யப்பட்டார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.இந்தூர் கூடுதல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) ராஜேஷ் தண்டோடியா, “இரண்டு வீராங்கனைகள் தங்கள் ஹோட்டலுக்குத் திரும்பும்போது முறையற்ற நடத்தையை எதிர்கொண்டதாக ஆஸ்திரேலியப் பாதுகாப்புக் குழுவிடமிருந்து புகார் வந்தது. அதே இரவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டார். குற்றவாளி மீது இதற்கு முன் குற்ற வழக்குகள் உள்ளன, அவரது பதிவேட்டை நாங்கள் விசாரித்து வருகிறோம்,” என்று தெரிவித்தார்.சம்பவத்தைத் தொடர்ந்து, உதவி ஆணையர் ஹிமானி மிஸ்ரா இரண்டு வீராங்கனைகளையும் சந்தித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தார். இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவுகள் 74 (பெண்ணின் மானபங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்) மற்றும் 78 (பின்தொடர்தல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.”ஆஸ்திரேலிய மகளிர் அணியின் இரண்டு உறுப்பினர்களை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அணுகி, இந்தூரில் ஒரு காஃபி கடைக்கு நடந்து சென்றபோது முறையற்ற விதத்தில் தொட்டதை ஆஸ்திரேலிய அணி உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அணியின் பாதுகாப்புப் பிரிவினரால் போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது, அவர்கள் இந்த விஷயத்தைக் கையாண்டு வருகின்றனர்,” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.”இந்தியா அதன் விருந்தோம்பல் மற்றும் அக்கறைக்கு பெயர் பெற்றது. இதுபோன்ற சம்பவங்களுக்கு எங்களிடம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையே உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் ஆகும். குற்றவாளியைப் பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுத்த மாநில காவல்துறையை (மத்திய பிரதேசம்) பாராட்டுகிறோம். பாதுகாப்பு நெறிமுறைகளைத் தேவைப்பட்டால் மேலும் இறுக்கமாக்க மீண்டும் பரிசீலிப்போம் என்று உறுதியளிக்கிறோம்,” என்று கூறினார்.மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் செயலாளர் சுதீர் அஸ்னானி, “இந்தூர் வீதிகளில் நடந்த இந்த விரும்பத்தகாத சம்பவம் எங்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. ஒரு பெண் கூட இதுபோன்ற துயரத்தை அனுபவிக்கக் கூடாது, பாதிக்கப்பட்டவர்களுடன் எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும். இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம், பாதுகாப்பு, கண்ணியம் போன்ற மதிப்புகளைப் போற்றும் அனைவரையும் ஆழமாக பாதித்துள்ளது. விருந்தாளியாக, எங்கள் நகரம் பாதுகாப்பு, கருணை மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றது என்றாலும், இந்த மனவேதனை அளிக்கும் மற்றும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக வீராங்கனைகளிடம் ம.பி.கிரிக்கெட் அணி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.