தொழில்நுட்பம்
இ-சிம் அப்டேட் கேட்டால் உஷார்… ஒரே ஓ.டி.பி-யால் ரூ.11 லட்சம் இழந்த மும்பை மருத்துவர்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இ-சிம் அப்டேட் கேட்டால் உஷார்… ஒரே ஓ.டி.பி-யால் ரூ.11 லட்சம் இழந்த மும்பை மருத்துவர்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?
மும்பையில் நடந்த ஒரு சம்பவம், டிஜிட்டல் உலகில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை எப்படிச் சில வினாடிகளில் இழக்க முடியும் என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்தியுள்ளது. மருத்துவர் ஒருவருக்கு e-SIM-க்கு மாறுவதாக வந்த ஒரு சாதாரண கால், அவரது வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ.11 லட்சம் மாயமாவதில் முடிந்துள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இந்தச் சம்பவத்தின் தொடக்கம் சாதாரணமாக இருந்தது. மருத்துவரை தொடர்புகொண்ட மர்மநபர், தான் ஒரு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஊழியர் என்றும், அவருடைய பிஸிக்கல் சிம்-ஐ e-SIM-ஆக மேம்படுத்த உதவுவதாகவும் கூறியுள்ளார். வசதிக்காக ஆசைப்பட்ட மருத்துவர், அவர்கள் சொன்னபடி தனது சேவை வழங்குநரின் அதிகாரப்பூர்வ செயலிக்குள் சென்றுள்ளார். மோசடி நபர் சொன்ன வழிமுறைகளை அவர் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றினார். அப்போது மருத்துவருக்கு ஓ.டி.பி. வந்தது. அழைத்தவர், அது “சிம் அப்டேட்”டுக்கான பாஸ்வேர்ட் என்று கூறியதைக் கேட்டு, மருத்துவரும் யோசிக்காமல் அதை அவர்களிடம் பகிர்ந்துவிட்டார். 24 மணி நேரத்தில் உங்க பழைய சிம் செயலிழந்துவிடும் என்று கூறி இணைப்பைத் துண்டித்தார். ஆனால், 2 நாட்களுக்குப் பிறகுதான் பேரதிர்ச்சி காத்திருந்தது.மருத்துவருக்கு வந்த மின்னஞ்சலின் (Email) பாஸ்வேர்ட் தானாக மாற்றப்பட்டிருந்தது. அவர் சுதாரிப்பதற்குள், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10.5 லட்சத்திற்கும் அதிகமான பணம் வெவ்வேறு கணக்குகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டுவிட்டது. ஓ.டி.பி-ஐப் பகிர்ந்ததால், மோசடி கும்பல் மருத்துவருடைய மொபைல் எண்ணை முழுமையாகக் கைப்பற்றி, வங்கி மற்றும் தனிப்பட்ட தகவல்களை எளிதாக அணுகியுள்ளனர்.இந்த விவகாரம் குறித்து மும்பை சைபர் பிரிவில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில் இறங்கிய போலீஸார், மோசடிப் பணத்தை பெற்ற வங்கிக் கணக்கைப் பின்தொடர்ந்து, ஒரு நபரை அடையாளம் கண்டுள்ளனர். அவர், புனேவில் உள்ள மருத்துவமனையின் அலுவலக உதவியாளர் (Office Boy) என்பதும், அவர் தனது வங்கிக் கணக்கை மோசடி கும்பலுக்கு வாடகைக்குக் கொடுத்ததும் தெரியவந்தது. மோசடிக்கு உதவிய அந்த நபர் கைது செய்யப்பட்டார்.இ-சிம் மோசடி எப்படி வேலை செய்கிறது?இ-சிம் என்பது, போனில் உட்பொதிக்கப்பட்ட டிஜிட்டல் சிம் ஆகும். இது வசதியானது என்றாலும், இதைப் பயன்படுத்தி மோசடி செய்ய சைபர் திருடர்கள் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். மோசடியாளர், தொலைத்தொடர்பு ஊழியர் போல அழைத்து, சிம் கார்டில் ‘பிரச்னை’ இருப்பதாகப் பயமுறுத்துவார்கள். பாதிக்கப்பட்டவரை ஓ.டி.பி-ஐப் பகிரும்படி அல்லது போலியான ‘அப்டேட்’ லிங்க் கிளிக் செய்யும்படி வற்புறுத்துவார்கள். ஓ.டி.பி. கிடைத்ததும், உங்க சிம்மைச் செயலிழக்கச் செய்துவிட்டு, அதே எண்ணுக்குச் சொந்தமாக டூப்ளிகேட் இ-சிம்-ஐ தங்கள் சாதனத்தில் ஆக்டிவேட் செய்வார்கள். உங்க மொபைல் எண்ணின் கட்டுப்பாடு அவர்களிடம் சென்றவுடன், வங்கிகள், மின்னஞ்சல்கள், டிஜிட்டல் வாலெட்டுகள் என அனைத்திற்குமான பாஸ்வேர்ட் மாற்றி, பணத்தைத் திருடுவார்கள்.உங்களைப் பாதுகாக்க 3 முக்கிய வழிகள்இந்தியா சைபர் கிரைம் மையம் (I4C) அளிக்கும் முக்கிய எச்சரிக்கை இதுதான்:ஓ.டி.பி-ஐப் பகிரவேண்டாம்: எக்காரணம் கொண்டும், எந்தவொரு கால் அல்லது எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஒரு முறை கடவுச்சொல்லைப் (OTP) பகிர வேண்டாம்.லிங்க்-ஐ தவிர்க்கவும்: உங்களைத் தேடி வரும், சிம் அப்டேட் அல்லது e-SIM மாற்றுவதற்கான சந்தேகத்திற்குரிய இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிருங்கள்.உடனடி புகார்: உங்களுக்கு மோசடி நடப்பதாகச் சந்தேகம் வந்தால், உடனடியாக உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரளியுங்கள்.