இலங்கை
யாழில் பொலிஸாரால் சுடப்பட்ட இளைஞன்: மூத்த சட்டத்தரணி கண்டனம்!
யாழில் பொலிஸாரால் சுடப்பட்ட இளைஞன்: மூத்த சட்டத்தரணி கண்டனம்!
சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என பொலிஸார் சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று சட்டவிரோதமாக செயற்பட முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
கொடிகாமத்தில் இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்றார் என 18 வயதான இளைஞன் மீது பொலிஸார் கண் மூடி தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு ஒரு எல்லை உண்டு. அவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டே சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும். சட்டத்தின் எல்லைகளை தாண்டி சட்டவிரோதமான முறையில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது. இளைஞன் சட்ட விரோதமான முறையில், மணலை ஏற்றி சென்றார் என்றால் அதனை நிறுத்த பொலிஸாருக்கு பல வழிகள் உண்டு.
வாகன சில்லுகளை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்கலாம்.இருப்பினும், வாகனத்தின் சில்லுகளை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளாது, கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
மனித உயிர்கள் பெறுமதியானவை, அவற்றை கண்மூடி தனமாக பறிக்க அனுமதிக்க முடியாது. எனவே இந்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் தேவை அதற்கு பொலிஸார் ஒத்துழைக்க வேண்டும். நீதியை மறைக்காது, விசாரணைகளுக்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.