இலங்கை

வெலிகம துப்பாக்கிதாரி கைதானது எப்படி? அதிகாரிகளின் இரகசிய வேட்டை

Published

on

வெலிகம துப்பாக்கிதாரி கைதானது எப்படி? அதிகாரிகளின் இரகசிய வேட்டை

வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகர கடந்த 22ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி, ரூ. 20 இலட்சத்துக்கான ஒப்பந்தத்தின் பேரில் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

“டுபாய் லொக்கா” என்ற நபர் இந்த ஒப்பந்தத்தை தமக்கு வழங்கியதாக துப்பாக்கிதாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Advertisement

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளிகளில் சந்தேக நபர்கள் தப்பிச் செல்லும் காட்சிகள், அத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் பிரிந்து செல்லும் காட்சிகள் சிசிடிவி கெமராக்களில் பதிவாகியிருந்தன.

அதன் அடிப்படையில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், கெகிராவ, பொனேகம பகுதியில் கைவிடப்பட்டிருந்த வீடொன்றில் மறைந்திருந்த பெண்ணொருவரும் இரு ஆண்களும் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

எனினும், துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கப்பட்ட நபர் காவல்துறையினருடன் போராடித் தப்பிச் சென்றார். 

Advertisement

கெகிராவையிலிருந்து தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி கொழும்புக்கு வந்துள்ளமை தொலைபேசித் தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படை இணைந்து கொழும்பின் பல பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டன.

சந்தேகநபர் பொரளை, சஹஸ்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோது, தனது தோற்றத்தை மாற்றும் நோக்கில் தலைமுடியை வெட்டி, தனது உடைகளையும் மாற்றிக் கொண்டுள்ளார்.

Advertisement

அவர் அங்கு ஏதோ ஒரு போதைப்பொருளை உட்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர் தனது கைபேசிக்கு மின்னேற்றம் செய்து கொள்வதற்காக அதனை தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்திருந்தார். காவல்துறை சோதனையின்போது, அந்தத் தொலைபேசி மீட்கப்பட்டதுடன் வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், தொலைபேசித் தரவுகளின் கண்காணிப்பு மூலம், சந்தேகநபர் இராஜகிரிய பகுதிக்கு சென்று மாலை 6 மணியளவில் மஹரகம, நாவின்ன பகுதிக்கு சென்றமை தெரியவந்தது.

Advertisement

அதன்படி, காவல்துறை விசேட அதிரடிப் படை மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் அவர் நேற்றிரவு (26) மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகரவைக் கொலை செய்வதற்காக ரூ. 20 இலட்சம் பெறுமதியான ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது

இந்த ஒப்பந்தம் “டுபாய் லொக்கா” என்ற நபரால் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

ஒப்பந்தத் தொகையில் ரூ. 12 இலட்சம் கடந்த 22ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ. ஒன்றரை இலட்சம் பணத்தைப் பெறுவதற்காகவே சந்தேகநபர் நாவின்ன பகுதிக்கு வந்ததாகத் தெரிய வந்துள்ளது.

டுபாயில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பின் ஊடாக, நாவின்ன பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் ரூ. ஒன்றரை இலட்சம் பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நேற்று மாலை 6:30 அளவில் அந்த இடத்துக்கு வந்த துப்பாக்கிதாரி, பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் மஹரகம நோக்கிச் செல்வதற்காக முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, விசேட அதிரடிப் படை மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கண்காணித்தனர்.

மஹரகம நகரின் மையத்தில் உள்ள அரச மரம் அருகே சந்தேகநபரை கைது செய்ய முயன்றபோது, அவர் முச்சக்கர வண்டியில் இருந்து குதித்து, போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் ஹை லெவல் வீதி வழியாக சுமார் 600 மீற்றர் தூரம் கொழும்பு நோக்கி ஓடி, அருகில் இருந்த வாகன திருத்துமிடத்துடனான வாகன தரிப்பிடமொன்றுக்குள் நுழைந்துள்ளார்.

அதன்போது, அங்கு இருந்த நபர்களின் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள் மாலை 6:45 அளவில் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் இடது கையில் முழங்கைக்குக் கீழ் “ஹிதுமதே ஜீவிதய” (இஷ்டப்படி வாழும் வாழ்க்கை) என்றும், வலது கையில் “அனுராதா” என்றும், மார்பின் இடது பக்கத்தில் மனைவியினுடையது என கருதப்படும் பெயரையும் வலது பக்கத்தில் “சசந்தி துவ” (சசந்தி மகள்) என்றும் பச்சை குத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், இன்று சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version