இந்தியா
புதுவையில் பிரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக; அமல்படுத்தினால் போராட்டம் – சி.பி.எம் மனு
புதுவையில் பிரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக; அமல்படுத்தினால் போராட்டம் – சி.பி.எம் மனு
புதுச்சேரி மின் துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் துறை தலைவர் கனியமுதனை இன்று (27.10.2025) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ். இராமச்சந்திரன் சந்தித்து, மக்கள் விரோதமான தேசத்திற்கு விரோதமான பிரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் (RDSS) திட்டத்தை உடனடியாகக் கைவிடக் கோரி விரிவான புகார் மனு அளித்தார்.மனு அளிக்கும்போது சி.பி.எம் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் வெ. பெருமாள், கொளஞ்சியப்பன், ஜி. இராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட கண்காணிப்பு பொறியாளர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மனுவில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய அம்சங்கள் திட்டத்தை ரத்து செய்யக் கோரும் அடிப்படை காரணங்கள்:தனியார்மயமாக்கலின் முதல்படி: புதுச்சேரி மின் துறையைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம் தனியார்மயமாக்கலின் முதல் நடவடிக்கை ஆகும்.மக்களின் விருப்பம் நிராகரிப்பு: மின் உபயோகிப்பாளர்களின் கருத்தினை / விருப்பத்தினை அறியாமல் தன்னிச்சையாக ஒருதலைப்பட்சமாக திட்டத்தை அமலாக்குவது அவர்களின் மின்சார உரிமையைப் பறிப்பதாகும்.பிரீபெய்டு அபாயம்: முதலில் பிரீபெய்டு மீட்டர் என்று கூறி, எதிர்ப்புக்குப் பின் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே என்று மாற்றுவது, படிப்படியாக முழுமையாக பிரிபெய்ட் திட்டத்திற்கு மாற்றுவதற்கான நயவஞ்சகத் திட்டம் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.அமைச்சரின் முரண்பாடு: கடந்த 29.08.25 அன்று அமைச்சர் ஸ்மார்ட் மீட்டர் இன்னும் வாங்கப்படவில்லை என்று கூறியிருந்த நிலையில், தற்போது ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் பூசை போட்டு திட்டத்தை அவசர அவசரமாகத் தொடங்கி இருப்பது கண்டனத்திற்குரியது.மின் துறையிடம் மார்க்சிஸ்ட் கட்சி எழுப்பிய முக்கியக் கேள்விகள் (15 கேள்விகளில் சில):தொழில்நுட்பப் பிரச்சினைகள்: நகரப் பகுதிகளில் ஏற்கனவே பொருத்தப்பட்ட 32,000 ஸ்மார்ட் மீட்டர்களால் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டனவா? கிராமப்புறங்களில் நெட்வொர்க் நிலை என்னவாகும்?விவசாய மின்சாரம் & மானியம்: விவசாயத்துக்கான இலவச மின்சாரம் தொடருமா? DBT மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்ற நிலையில், கேஸ் மானியத்திற்கு ஏற்பட்ட கதி இதற்கும் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதம் உண்டா?பிரீபெய்டு உத்திரவாதம்: இந்தத் திட்டம் முழுமையாக ப்ரீபெய்டு திட்டமாக மாறாது என்பதற்கான உறுதியான உத்திரவாதம் உண்டா?பீக் ஹவர் கட்டணம்: உச்சபட்ச மின் பயன்பாட்டுக் காலம் (Peak hour) காலை 6-10 மணி மற்றும் மாலை 6-10 மணியில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படாது என புதுச்சேரி மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதா?தரவுப் பாதுகாப்பு: தனியார் மூலம் பராமரிக்க உள்ள நிலையில், உபயோகிப்பாளர்களின் தரவுகள் களவாடப்படாது என்பதற்கான உத்தரவாதமும், தரவுகள் பாதுகாக்கப்படுவதற்கான உறுதிப்பாடும் உண்டா?ஊழியர்களின் நிலை: TOTEX முறையில் அபார்வா நிறுவனம் பல பணிகளைச் செய்ய உள்ளதால், தற்போது அப்பணிகளைச் செய்யும் நூற்றுக்கணக்கான மின்துறை ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு என்னவாகும்? புதிய நியமனங்கள் கேள்விக்குறியாகாதா?நிதிச் சுமை: தற்போதுள்ள நிதி நெருக்கடியில் சுமார் ₹400 கோடி கடன் வாங்கி இந்தத் திட்டத்தை அவசரமாக அமல்படுத்த வேண்டுமா?தேவையின்மை: தற்போதுள்ள டிஜிட்டல் மீட்டர் மூலம் 97% வருவாய் ஈட்டுகிற போதும், இந்தியச் சராசரியை விட மின் இழப்பு மிகக் குறைவாக உள்ள போதும் இந்த ஸ்மார்ட் மீட்டர் தேவையா?எனவே இந்த மக்கள் விரோத ஸ்மார்ட் மீட்டர் (RDSS) திட்டத்தை அமலாக்காமல் உடனடியாகக் கைவிட வேண்டும் / ரத்து செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின் துறையை வலியுறுத்துகிறோம். இதை மீறி அரசு திட்டத்தை அமலாக்க முற்படுமேயானால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்தப் பகுதி மக்களையும் திரட்டி இந்த மக்கள் விரோதத் திட்டத்திற்கு எதிராகத் தீவிரமான போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்” கட்சியின் மாநில குழு சார்பில் தெரிவித்தனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி