தொழில்நுட்பம்
புயல் எச்சரிக்கை இனி நொடிகளில்.. மனித உயிர்களைக் காப்பாற்ற களமிறங்கும் ஏ.ஐ!
புயல் எச்சரிக்கை இனி நொடிகளில்.. மனித உயிர்களைக் காப்பாற்ற களமிறங்கும் ஏ.ஐ!
காலநிலை மாற்றத்தின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் கடலோரப் பகுதிகள், இன்று புதிய அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றன: அதுதான் புயல் அலை எழுச்சி. புயலின்போது கடல் நீர் சுவர்கள் போல் எழுந்து நிலப்பரப்பை ஆக்ரோஷமாகத் தாக்குவதே இந்த அலை எழுச்சி. 1900-ஐ விட இன்று கடல் மட்டம் சுமார் 8 அங்குலம் உயர்ந்துவிட்டது. 2100-க்குள் இது 1 முதல் 8 அடி வரை உயரலாம். இதனால், சிறிய புயல்கள் கூட பயங்கர வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.அமெரிக்காவில் மட்டும் சூறாவளிகளால் ஏற்பட்ட $1.5 டிரில்லியன் சேதத்தில் பெரும்பங்கு, இந்த அலை எழுச்சியால் உண்டானதுதான். மனித உயிர்களையும், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளையும் காப்பாற்ற வேண்டுமானால், நமக்குச் சரியான மற்றும் வேகமான முன்னறிவிப்புகள் தேவை. ஆனால், அதைச் செய்வது அத்தனை சுலபமல்ல.இதுவரை, வானிலை முன்னறிவிப்பாளர்கள் NOAA-வின் ADCIRC போன்ற இயற்பியல் அடிப்படையிலான கணினி மாதிரிகளை நம்பியிருந்தனர். ஆனால், கடற்கரையின் ஒவ்வொரு பகுதியையும் பிரித்துப் பார்க்கும் இந்த உயர் தெளிவுத்திறன் கொண்ட கணிப்புகளுக்கு, சக்திவாய்ந்த மீக்கணினிகளிலேயே (Supercomputers) கூட பல மணிநேரம் தேவைப்படும். ஒரு புயல் நெருங்கும்போது, ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது அல்லவா? இப்போது, விஞ்ஞானிகள் புயல் கணிப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளனர்.கடந்தகால புயல் டேட்டா மற்றும் உருவகப்படுத்துதல்களை கொண்டு இயந்திர கற்றல் மாதிரிகளுக்கு (Machine Learning) பயிற்சி அளித்துள்ளனர். இந்த ஏ.ஐ. மாதிரிகள், இயற்பியல் மாதிரிகளின் வேலையை மிகக் குறைந்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய “வேகமான பிரதிநிதிகளாக” செயல்படுகின்றன. புயலின் காற்று வேகம், வளிமண்டல அழுத்தம் போன்ற டேட்டா இந்த ஏ.ஐ. நெட்வொர்க்குகளுக்கு (Neural Networks) கொடுத்தால்போதும், அலை எழுச்சியின் அளவை நிமிடங்களில் துல்லியமாக கணித்துவிடுகின்றன. மேலும், இதுவரை நடக்காத மிக மோசமான மற்றும் தீவிரமான சூறாவளிகளைப் பற்றி AI தெரிந்துகொள்ள, விஞ்ஞானிகள் செயற்கையாக உருவாக்கப்பட்ட (Synthetic) சூறாவளி தரவுகளைக் கொண்டு அதற்குப் பயிற்சி அளித்து வருகின்றனர். புயல் அலை எழுச்சி எச்சரிக்கைகளை மணிநேரங்களுக்குப் பதிலாக, இனி நிமிடங்களில் நம்மால் பெற முடியும்.இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் கிடைக்கும் மிக முக்கியப் பலன், உயிர்காக்கும் எச்சரிக்கைகளை மிக வேகமாக வழங்குவதுதான். எதிர் காலத்தில், இந்த ஏ.ஐ. மாதிரிகள், ஒரு நகரில் தெரு மட்டத் தெளிவுடன் (Street-level detail) வெள்ள வரைபடங்களை நிமிடங்களில் உருவாக்கி, எந்தெந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்பதை காட்டும். புகைப்படங்களை பயன்படுத்தி புயல் சேதத்தை மதிப்பிடவும் ஆராய்ச்சியாளர்கள் ஏ.ஐ.-க்கு பயிற்சி அளிக்கின்றனர். இது தரவுகளைச் சேகரிப்பதில் உள்ள இடைவெளிகளை நிரப்ப உதவும்.தற்போது, இந்த அதிவேக ஏ.ஐ கருவிகள், பாரம்பரியக் கணிப்பு முறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களில், மேலும் அதிகமான தரவுகள் இந்த அமைப்புகளுக்குச் செல்லச் செல்ல, கடலோரச் சமூகங்கள் இன்னும் வேகமான மற்றும் துல்லியமான புயல் எச்சரிக்கைகளைப் பெறும். காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் புயல்கள் வலுப்பெறும் நிலையில், இது நமக்குக் கிடைத்துள்ள முக்கியமான பாதுகாப்பு அரண்.