பொழுதுபோக்கு
எஸ்.பி.பி பாடலில் எனக்கு பிடித்தது இதுதான், அவர் குரலிலே பாடி அசத்திய எஸ்.ஜானகி: சூப்பர் ஹிட்டான பாட்டு தான்!
எஸ்.பி.பி பாடலில் எனக்கு பிடித்தது இதுதான், அவர் குரலிலே பாடி அசத்திய எஸ்.ஜானகி: சூப்பர் ஹிட்டான பாட்டு தான்!
இந்தியாவின் புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவர் எஸ்.ஜானகி. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 17 மொழிகளில் 40,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பல பாடல்களை அவரே எழுதி பாடியதாகவும் சொல்லப்படுகிறது. ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர் 1957-ஆம் ஆண்டு வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.பாடகி ஜானகியின் புகழ் ’சிங்கார வேலனே தேவா’ என்ற பாடலின் மூலம் உலகம் எங்கும் பரவியது. இதையடுத்து எக்கச்சக்கமான பாடல் வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது. தனது குரலால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் பாடகி ஜானகி அனைத்து வயதினருக்கும் ஏற்றார் போல் பாடல்களை பாடக் கூடிய வல்லமை படைத்தவர். 6 வயது குழந்தை முதல் 60 வயது கிழவன் என தனது குரலில் வித்தியாசம் காட்டி பாடும் திறமை கொண்டவர். ‘கண்ணா நீ எங்கே, வா வா நீ இங்கே’ என்ற பாடலில் 2 வயது குழந்தை போலவும், ‘காதலின் தீபம் ஒன்று’ பாடலில் இளம்பெண் குரல் போன்றும் பாடல்களை பாடியுள்ளார். இளம் வயதில் உதிரிப்பூக்கள் படத்தில் இடம்பெற்றிருந்த ‘போடா போடா போக்கை ‘ என்ற பாடலை முதியவர் குரலில் பாடி அசத்தியிருப்பார். இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார் . எம்.எஸ்.வி, ஏ.ஆர்.ரஹ்மான் என அன்று தொடங்கி இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் வரை பாடியுள்ளார். வசீகர குரல் மூலம் ரசிகர்களை மயக்கிய இவர் இரண்டு முறை தமிழ் பாடல்களுக்காகவும், ஒரு முறை மலையாளம் மற்றும் ஒரு முறை தெலுங்கு பாடலுக்கு என 4 தேசிய விருதை வென்றுள்ளார். பாடகி ஜானகிக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. மேலும், தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.இந்நிலையில், பாடகி ஜானகி, எஸ்.பி.பி பாடிய பாடல்களில் தனக்கு விருப்பமான பாடல் குறித்து பேசிவிட்டு அவர் குரலிலேயே அந்த பாடலையும் பாடியுள்ளார். இது குறித்து வெளியான வீடியோவில், “எஸ்.பி.பி பாடிய பாடல்களில் எனக்கு பிடித்த பாடல் எத்தனையோ இருக்கிறது. அதிலும், ஒரு பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். அந்த பாடல் ரெக்கார்டிங்கின் போது நானும் இருந்தேன். அந்த பாடல் முழு ரெக்கார்டிங்கின் போதும் நான் பக்கத்தில் உட்கார்ந்து கேட்டு ரொம்ப ரசித்த பாட்டு. அது என்ன பாடல் என்றால் ‘பனி விழும் மலர் வனம்’ பாடல் தான்” என்று கூறிவிட்டு எஸ்.பி.பி குரலில் அந்த பாட்டை ஜானகி பாடி காண்பித்தார்.