இந்தியா

சுழன்று அடித்த சூறைக்காற்று… 110 கி.மீ வேகத்தில் கரையை கடந்த ‘மோந்தா’ புயல்: ஆந்திராவில் பெண் பலி

Published

on

சுழன்று அடித்த சூறைக்காற்று… 110 கி.மீ வேகத்தில் கரையை கடந்த ‘மோந்தா’ புயல்: ஆந்திராவில் பெண் பலி

வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் நேற்று (அக்டோபர் 28) மாலை ஆந்திரப் பிரதேச காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடந்தது. இதனால் தென் மாநிலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், அண்டை மாநிலமான ஒடிசாவிலும் இதன் தாக்கம் உணரப்பட்டு, 15 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:ஆந்திரப் பிரதேசத்தின் கோனசீமா மாவட்டத்தில் உள்ள மகனகுடெம் கிராமத்தில், பலத்த காற்றினால் ஒரு பனை மரம் சரிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் பி.டி.ஐ.யிடம் தெரிவித்தார். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி, இந்த அதிதீவிர புயல், இரவு 7 மணிக்கு கரையை கடக்க தொடங்கி, காக்கிநாடா மற்றும் மசூலிப்பட்டினம் இடையே மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா, ஏலூரு மற்றும் காக்கிநாடா உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று (அக்டோபர் 29) காலை 6 மணி வரை சாலைகளில் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது என்று பி.டி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.முன்னதாக, பகல் நேரத்தில் காக்கிநாடா, விசாகப்பட்டினம், கோனசீமா, கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டிருந்தது. புயலின் தாக்கத்தால் சுமார் 38,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நின்ற பயிர்களும், 1.38 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த தோட்டக்கலைப் பயிர்களும் அழிந்தன.சுமார் 76,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசாங்கம் பல்வேறு இடங்களில் 219 மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது.இந்த புயல் அச்சுறுத்தல் காரணமாக இந்திய ரயில்வே, கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் வால்டேர் பிரிவில் நேற்று பல ரயில்களை ரத்து செய்தது, மாற்றுப் பாதையில் இயக்கியது மற்றும் நேரம் மாற்றியமைத்தது போன்ற நடவடிக்கைகை மேற்கொண்டது.  இதேபோல், தெற்கு மத்திய ரயில்வே (SCR) மண்டலம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மொத்தம் 120 ரயில்களை ரத்து செய்தது என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.தீவிர ‘மோன்தா’ புயல் காரணமாக, விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட 32 விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. பலத்த காற்றினால் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதால், பல்வேறு இடங்களில் மொபைல் டிரான்ஸ்பார்மர்கள்/ ஜெனரேட்டர்களுடன் விரைவுப் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்பு, வெளியேற்றம் மற்றும் வெள்ளப் பணிகளுக்காக 11 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் 12 மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் தயார் நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தீயணைப்பு சேவைகள், நீச்சல் வீரர்கள், ஓ.பி.எம். படகுகள், உயிர்காக்கும் ஜாக்கெட்டுகள் மற்றும் அவசரகால உபகரணங்கள் கடற்கரைப் பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், முதியோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு உணவு மற்றும் கவனிப்பை உறுதி செய்ய பல புயல் பாதுகாப்பு மையங்களில் சமூக சமையலறைகள் (Community kitchens) செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் கடலோர மாவட்டங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் மாநில அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.ஒடிசாவில், கஞ்சம், கஜபதி, ராயகடா மற்றும் மல்கான்கிரி போன்ற தென் ஒடிசாவின் சில பகுதிகளில் கனமழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்தது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 9 செ.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளதாகவும், புதன்கிழமையும் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக கஜபதி மாவட்டத்தின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன, நிலச்சரிவு காரணமாக சாலைகள் தடைப்பட்டன மற்றும் குடிசை வீடுகள் சேதமடைந்தன போன்ற தகவல்கள் வந்துள்ளன.ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி செவ்வாய்க்கிழமை அன்று நிர்வாகத்தின் தயார்நிலையை ஆய்வு செய்த நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக 2,000-க்கும் மேற்பட்ட புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ‘ஜீரோ உயிரிழப்பு’ (zero casualty) என்ற இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து 12,000-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே இந்த மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version