இந்தியா
தண்டவாளத்தில் நின்று ‘ரீல்ஸ்’ எடுத்த சிறுவர்கள் இருவர் ரயில் மோதி பலி!
தண்டவாளத்தில் நின்று ‘ரீல்ஸ்’ எடுத்த சிறுவர்கள் இருவர் ரயில் மோதி பலி!
இந்தியாவின் மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் தரங்கான் தாலுகா பத்ராட் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த போது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை 10.00 மணி அளவில் காதில் ஹெட்போனுடன் தண்டவாளத்தில் நின்று ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துள்ளனர். இதன்போது, தண்டவாளத்தில் ஆமதாபாத்- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் இருவரும் ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவு செய்துகொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில், தண்டவாளத்தில் 2 பேர் நிற்பதை கண்ட என்ஜின் சாரதி ஒலி எழுப்பியுள்ளார்.
ஆனால் காதில் ஹெட்போன் இருந்ததால் ஒலி எழுப்பிய சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை. அப்போது, வேகமாக வந்த ரயில் சிறுவர்கள் இருவர் மீது மோதிச்சென்றுள்ளது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு உயிருக்கு போராடியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த ரயில் பொலிஸார் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமைக்கு அனுப்பினர். அங்கு மருத்துவர் நடத்திய பரிசோதனையில் ஏற்கனவே 2 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.