இந்தியா
புதுச்சேரி மருந்து கொள்முதல் ஊழல்: உயர்மட்டக் குழு அமைக்க முன்னாள் எம்.எல்.ஏ சாமிநாதன் கோரிக்கை
புதுச்சேரி மருந்து கொள்முதல் ஊழல்: உயர்மட்டக் குழு அமைக்க முன்னாள் எம்.எல்.ஏ சாமிநாதன் கோரிக்கை
புதுச்சேரி அரசு மருத்துவமனைகளுக்குத் தரமற்ற மருந்து கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில், உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழலுக்கு மூளையாகச் செயல்பட்ட அப்போதைய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளுக்குத் தரமற்ற மருந்துகள் கொள்முதல் செய்ததாக, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்குச் சுகாதாரத் துறையின் இயக்குநர்கள் உட்பட 6 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்துள்ளது. கடந்த ஆட்சியிலும், தற்போதுள்ள ஆட்சியிலும் ஒவ்வொரு துறையிலும் ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் மலிந்துள்ளதை நிரூபிக்கும் வகையில், இந்த மருந்து ஊழல் நிகழ்ந்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் (2018-19) குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்து மாத்திரைகள் தரமற்றவை என்றும், இந்தத் தரமற்ற மருந்துகளாலேயே இன்று அதிகாரிகள் பலியாகி இருப்பதாகவும் சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.அதிகாரிகள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும், இதற்கு மூளையாகச் செயல்பட்ட அப்போதைய முதலமைச்சர் மற்றும் அமைச்சரை ஏன் இந்த வழக்கில் சேர்க்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் கொள்முதல், டெண்டர் போன்ற அனைத்தும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் தலையீடு இல்லாமல் நடந்து வருகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் சாமிநாதன் தெரிவித்துள்ளார். தரமற்ற மருந்தை வாங்குவதற்குக் காரணமான அப்போதைய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், முதலமைச்சர்களும் அமைச்சர்களும் நிரந்தரமானவர்கள் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த ஊழலில் யார் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பதை வெளிக்கொண்டு வர, ஆளுநர் ஒரு உயர் மட்டக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆட்சியாளர்கள் சொல்லும் தவறான நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் அதிகாரிகள், உயர் பொறுப்பிலிருந்தும், அந்தஸ்தில் இருந்தும், அடுத்தவர் செய்த குற்றத்திற்காகக் குற்றவாளியாக மாற்றப்படுவார்கள் என்றும், தவறு செய்தவர்கள் என்றாவது ஒருநாள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.இந்த வழக்கில் அரசுக்கு 44 லட்சம் ரூபாய் இழப்பீடு என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், 2.5 கோடி ரூபாய்க்குத் தரமற்ற மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், ஒரு துறையிலேயே இவ்வளவு என்றால், மற்ற துறைகளை விசாரித்தால் கடந்த 50 ஆண்டுகளில் நடந்த கொள்ளைகள் கடவுளுக்கே வெளிச்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஏழை மக்கள், முதியோர்கள், குழந்தைகள் எனப் பலரும் அரசு மருத்துவமனையை நம்பியிருக்கும் நிலையில், தரமற்ற மருந்துகளால் அவர்களின் ஆயுள் காலம் பாதிக்கப்படுவது அனைத்துப் பாவங்களுக்கும் ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும். போலி மருந்து, தரமற்ற மருந்து வழங்கியவர்கள், ஆர்டர் செய்தவர்கள், உறுதுணையாக இருந்த ஆட்சியாளர்கள் அனைவருமே குற்றவாளிகள் என்றும் சாமிநாதன் சாடியுள்ளார். காங்கிரஸ், திமுக மற்றும் தற்போதைய ஆளுகின்ற அரசு என அனைவருமே ஊழலுக்குத் துணை போகின்றவர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது எனக் குற்றம் சாட்டிய அவர், ஊழல்வாதிகளிடமிருந்து புதுச்சேரியைக் காப்பாற்றப் புதிய சிந்தனையுள்ள இளைஞர்களும் மக்களும் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி