பொழுதுபோக்கு

ரயில்வே கேட்டில் நம்பியார், வழி மறித்து எச்சரித்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள்: ரீல் ஃபைட்டுக்கு ரியல் வார்னிங்

Published

on

ரயில்வே கேட்டில் நம்பியார், வழி மறித்து எச்சரித்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள்: ரீல் ஃபைட்டுக்கு ரியல் வார்னிங்

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடிக்கட்டி பறந்தவர் எம்.என். நம்பியார். இவர் எம்.ஜி.ஆர் படங்களில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார். தனது வில்லத் தனத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தவர் நம்பியார். நாடகக் குழுவில் பயணித்து பின் ‘பக்த ராமதாஸ்’ எனும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.ஆரம்ப காலத்தில் காமெடி நடிகராக இருந்த நம்பியாருக்கு ‘கஞ்சன்’ எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து, பல படங்களில் கதாநாயகனாக நடித்த நம்பியார் ஒரு கட்டத்தில் வில்லனாக நடிக்கத் தொடங்கினார். சிவாஜி, எம்.ஜி.ஆரின் பல படங்களில் நம்பியார் வில்லனாக நடித்திருப்பார். இந்நிலையில், ரயில்வே கேட்டில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தன்னை வழிமறித்து எச்சரித்தது குறித்து நடிகர் நம்பியார் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.அவர் பேசியதாவது, “எங்க வீட்டு பிள்ளை படம் ரிலீஸாகி ஓகோவென்று ஓடிக் கொண்டிருக்கும் நேரம். நான் ஒரு கால்ஷீட் முடித்துவிட்டு வீட்டு வந்து  சாப்பிட்டுவிட்டு மறுபடியும் கோடம்பாக்கம் போனேன். அப்போது மேம்பாலம் எல்லாம் இல்லை. சின்ன கேட் அருகில் காரை நிறுத்திவிட்டு கேட் எப்போது திறப்பார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாளு பசங்க என்னை பார்த்து நீதானே நம்பியார், எப்படி எங்க அண்ணனை அடிக்கலாம் என்று கேட்டார்கள். அப்போது உன்னையே யாருனு தெரியல உன் அண்ணனை எப்படி எனக்கு தெரியும் என்று கேட்டேன். அதற்கு அந்த பசங்க எங்கள் அண்ணன் வாத்தியாரை உனக்கு தெரியாதா என்று கேட்டார்கள். அப்போதுதான் எனக்கு புரிந்தது அவர்கள் எம்.ஜி.ஆரை சொல்கிறார்கள் என்று. நான் அவர்களிடம் அவர் என்னை அடித்தாரே அதற்கு நீ எதுவும் சொல்லவில்லையே என்று கேட்டேன். அந்த பசங்க அவர் உன்னை அடிக்கலாம் நீ அவரை அடிக்கக் கூடாது என்றார்கள். நான் அதற்கு தானே காசு தருகிறார்கள் என்று சொன்னதற்கு காசு கொடுத்தால் அடிச்சிறுவியா நீ? என்று கேட்டார்கள். அதன்பின்னர் தான் எனக்கு புரிந்தது இவர்களிடம் பேசி புரிய வைக்க முடியாது அட்ஜஸ்ட் பண்ணிதான் போக வேண்டும் என்று. அதன்பின்னர், நான் உங்கள் வாத்தியாரை அடிக்கவில்லை என்று சொன்னதும் அவர்கள் கட்சி மாறிவிட்டார்கள். நம்பியாருக்கு ஜெ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் விளக்கு கீழே விழுந்துவிடும். அந்த வெளிச்சத்தில் நானும், எம்.ஜி.ஆரும் சண்டைபோடுவோம். அந்த சண்டைக்காட்சி அந்த நேரத்தில் மிகவும் புதுமையாக இருந்தது. அந்த சண்டைக் காட்சியை பார்பதற்காக நானும் படத்தின் இயக்குநர் நீலகண்டனும் திரையரங்கிற்கு சென்றோம். திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது எம்.ஜி.ஆர் என்னை தேடி வரும் காட்சியின் போது மக்கள் இறங்காதே நம்பியார் கீழே இருக்கிறான் என்று சொல்கிறார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும்” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version