இலங்கை
கவிஞர் வைரமுத்துவின் கரங்களில் ஈழத்தமிழர்களின் ‘துருவேறும் கைவிலங்கு’ !
கவிஞர் வைரமுத்துவின் கரங்களில் ஈழத்தமிழர்களின் ‘துருவேறும் கைவிலங்கு’ !
தென்னிலங்கையின் அடிமைச் சிறையில் 16 ஆண்டு காலங்களாக தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஈழத்தமிழ் அரசியல் கைதி ‘விவேகானந்தனூர் சதீஸ்’ நெருக்கடிமிகு சிறைக்குள் இருந்து எழுதிய, ‘துருவேறும் கைவிலங்கு’ எனும் மெய்யாலானா நூல், ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மு.கோமகனால் பிரபல தென்னிந்திய கலைஞரான ‘கவிஞர் வைரமுத்துவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
20 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் பல தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தென்னிலங்கையின் உயர்ந்த சுற்றுமதிற் சுவர்களுக்குள் துயரனுபவித்து வருகின்ற எமது உறவுகளின் வெளித்தெரியாத பல உண்மைகளின் மெய்ச் சாட்சியமாகப் பார்க்கப்படுகின்ற ‘துருவேறும் கைவிலங்கு’ எனும் இந்த ஆவண நூல், அனைத்துத் தரப்புகளினதும் கூர்ந்தவதானிப்புக்கு உட்படுத்தவேண்டியது கால அவசியமாகிறது.
அந்த வகையில், “நீண்ட நெடும் போருக்கு பின்னரும் கூட, எமது தமிழினம் விடுதலைக்காக ஏங்குகின்ற வலிசுமந்த வாழ்வை அனுபவித்து வருகின்றது” என்கின்ற கனதிமிகு செய்தியினை, “ஈழத் தமிழினத்தின் விடுதலைப் பயணத்தில் பக்கத்து இருக்கைப் பங்காளியாக உறவுபூண்டு வருகின்ற தென்னிந்திய தேசத்திற்கு உரத்துச் சொல்ல வேண்டும்” என்பதற்காக ஈழத்தமிழ் திரைப்படத் தொடக்க விழா நிகழ்வுக்கு வருகை தந்திருந்த கவிஞர் வைரமுத்து அவர்களை, நேரில் சந்தித்த ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு, இந்த நூலினை அவரிடம் கையளித்துள்ளது.
நூலை கையேற்ற கவிஞர், “இந்த நூலின் தலைப்பே கைதிகளின் அவலக் கதியை பறைசாற்றுகின்றது” என ஆதங்கமடைந்ததுடன், கைதிகளின் நிலை பற்றியும் கேட்டறிந்துள்ளார்.