இந்தியா
கூட்டுறவு சங்கத்தில் ஊழல்: புதுச்சேரி கவர்னரிடம் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் மனு
கூட்டுறவு சங்கத்தில் ஊழல்: புதுச்சேரி கவர்னரிடம் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் மனு
புதுச்சேரி மாநிலம் சன்னியாசிக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பி-61-ல் நடைபெற்ற ஊழல் முறைகேட்டில் நடவடிக்கை எடுக்காத கூட்டுறவு பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர். தொடர்ந்து, மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செயலாளர் ஜெகநாதன் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியதாவது:- புதுச்சேரி மாநிலம் சன்னியாசிக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பி-61-ல் நடைபெற்ற ஊழல் முறைகேட்டில் நடவடிக்கை எடுக்காத கூட்டுறவு பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், கூட்டுறவுத் துறை செயலர், கண்காணிப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை, மற்றும் இயக்குநர், கணக்கு மற்றும் கருவூலக அதிகாரி ஆகியோரை வலியுறுத்துகிறது. புதுச்சேரிமாநிலம் சன்னியாசிக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பி-61-ல் கடந்த 2018-முதல் 2025-வரை ஊழல் மற்றும் முறைகேட்டில் சிக்கியுள்ளது. இதன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரி, மேற்படி சங்க அங்கத்தினர்களான ஜெயலட்சுமி, பிச்சாண்டி (எ) பன்னீர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர்களால் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுநாள்வரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்காத கூட்டுறவு பதிவாளர் யஷ்வந்தய்யா மற்றும் கூட்டுறவு அதிகாரி ரவிசங்கர் ஆகியோர் ஊழல் மற்றும் முறைகேட்டிற்கு துணைபோயுள்ளனர். மேலும் 31.10.2025-ம் தேதியில் கூட்டுறவு பதிவாளர் யஷ்வந்தய்யா ஓய்வு பெற உள்ளார் என்பதால் அவரது ஓய்வூதிய பண பலன்களையும், மாத ஓய்வூதியத்தையும் வழங்கிடாமல் அதுகுறித்து விசாரணைக்கு உட்படுத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பாகவும்,சன்னியாசிக்குப்பம் கடன் வழங்கும் சங்கத்தின் அங்கத்தினர்கள் சார்பாகவும் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.அத்துடன், புதுச்சேரி அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக ஊழல் மற்றும் முறைகேடுகளில் சிக்கி கைதாகி வரும் இந்தச்சூழலில் இதுபோன்ற ஊழல் முறைகேடு நடைபெற்று வருவதை கவனத்தில் கொண்டு ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.