பொழுதுபோக்கு
முதல் பட வாய்ப்பு, ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு நடந்தே வந்த தேவா ப்ரதர்ஸ்; ரஜினிகாந்த் ஓபன் டாக்
முதல் பட வாய்ப்பு, ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு நடந்தே வந்த தேவா ப்ரதர்ஸ்; ரஜினிகாந்த் ஓபன் டாக்
1986-ம் ஆண்டு வெளியான ‘மாட்டுக்கார மன்னாரு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. தொடர்ந்து 1989-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான ’மனசுக்கேத்த மகராசா’ படத்தின் மூலம் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வளர்ந்தார். அடுத்து தனது 3-வது படமாக ’வைகாசி பொறந்தாச்சு’ படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்றைக்கும் இளைஞர்களை துள்ளி விளையாட வைக்கும் அளவுக்கு பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த தேவாவை ‘தேனிசை தென்றல்’ என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். சென்னை மொழியில் பாடல்கள் எழுத தேவாவை தவிர வேறு யாராலும் முடியாது. சென்னை மொழி பாடல்களை மிகவும் அழகாக பாடக் கூடியவர் தேவா.ரஜினிக்கு அண்ணாமலை, பாட்ஷா, சரத்குமாருக்கு சூரியன், வேடன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ள தேவா, இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் பாடகராகவும் முத்திரை பதித்துள்ளார். இவரது கானா பாடல்களுக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. பல படங்களில் தேவா இசையமைப்பாளராகவே நடித்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் தேவா மற்றும் அவரது சகோதரர்கள், முதல் பட வாய்ப்பின் போது ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு நடந்து வந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.அவர் கூறியதாவது, “தேவா முதல் படம் புக்காகிவிட்டார். 6:30 மணிக்கு எல்லாம் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இருக்க வேண்டும். அப்போது தேவாவும் அவரது சகோதர்களும் ஆர்மோனியம் எல்லாம் தூக்கிக் கொண்டு ஒரு ஆட்டோவில் ஏ.வி.எம் ஸ்டுடியோ நோக்கி செல்கிறார்கள். அப்போது வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அங்காளம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு போகலாம் என்று போனபோது அங்கு அதிகப்படியான பள்ளம் இருந்ததால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகவில்லை. நேரமானதால் தேவாவும் அவரது சகோதரர்களும் ஆர்மோனியம், தபேலா எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு பின்னாடி பார்த்தபடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எதாவது ஆட்டோ வந்தால் ஏறிவிடலாம் என்று நினைத்துக் கொண்டு போகும் போது ஒரு ஆட்டோவும் நிறுத்தவில்லை. அப்படி ஓடியே ஏ.வி.எம் ஸ்டுடியோ வரைக்கும் சென்று இசையமைத்தார் தேவா” என்றார்.