இலங்கை
ரணிலுக்கு எதிரான வழக்கு: இன்று மீண்டும் விசாரணை!
ரணிலுக்கு எதிரான வழக்கு: இன்று மீண்டும் விசாரணை!
அரச நிதியை மோசடியாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது தொடரப்பட்ட வழக்கு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று மீளவும் விசாரணைக்கு வரவுள்ளது. பிரிட்டனில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அரச நிதியைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு ரணிலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ரணில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். வழக்கு இன்றையதினம் மேலதிக விசாரணைக்காகத் தவணையிடப்பட்டிருந்தது.
இதையடுத்தே வழக்கு இன்று விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்படவுள்ளது. ரணில் தரப்பின் மேலதிக சமர்ப்பணமும், அரச தரப்பின் மேலதிக சமர்ப்பணமும் இன்று முன்வைக்கப்படும் என்று சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, ரணிலுக்கு எதிரான வழக்கு முதன்முதலில் இடம்பெற்ற போது, நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற விடயங்களை சிலர் வீடியோவாகப் பதிவு செய்திருந்தனர். இன்னும் சிலர் ரணிலை சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்ல விடாது வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு குழப்பங்களில் ஈடுபட்டோரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.