விளையாட்டு
ஆனந்த கண்ணீர், ப்ளையிங் கிஸ்; ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய வீராங்கனைகள் உற்சாக கொண்டாட்டம்!
ஆனந்த கண்ணீர், ப்ளையிங் கிஸ்; ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய வீராங்கனைகள் உற்சாக கொண்டாட்டம்!
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலககோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி இமாலய வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், நேற்று 2-வது அரையிறுதி போட்டி நடைபெற்றது. நவி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி மோதியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 339 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி அசத்தியது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில், டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் வெள்ளொளி விளக்குகள் வெளிச்சத்தில் இந்திய வீராங்கனைகள் ஆனந்த கண்ணீருடன் வெற்றியை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 339 ரன்கள் வெற்றி இலக்கை அடையை இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் (நாட்அவுட்) எடுத்து அசத்தினார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அவர் இரு கைகைளையும் உயர்த்திக்கொண்டு மைதானத்தில் ஓடிய வீடியோக்கள் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. வெற்றி இலக்கை எட்டியவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் சக வீராங்கனை அமன்ஜோத்தும் இறுக்கமாக அணைத்துக்கொண்டனர், அதற்குள் வெளியில் இருந்த வீராங்கனைகள் பலரும் மைதானத்திற்கு ஓடிவந்து கொண்டாட்டத்தை தொடங்கினர். ஸ்மிருதி மந்தனா தனது சிறந்த தோழியான ஜெமிமாவிடம் முதலில் வந்து, அவரை அணைத்துக்கொண்டார். அதன்பிறகு நடந்தது அசல் உணர்ச்சிபூர்வமான ஆனந்த கண்ணீர், சிரிப்பு, மற்றும் விளையாட்டு மட்டுமே வழங்கக்கூடிய மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் கூட தன் உணர்ச்சிகளைத் கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து அழுதார். நடுவில், ஆட்டத்தில் நட்சத்திரமாக ஜொலித்த ஜெமிமா, பார்வையாளர்களைப் பார்த்து, ஒரு பறக்கும் முத்தத்தை (ஃபிளையிங் கிஸ்) அனுப்பினார், மற்றும் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைகளைக் கூப்பி வணங்கினார். இது நடப்பு சாம்பியன்களான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெறும் 5 விக்கெட் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றி மட்டுமல்ல. இது நம்பிக்கைக்கான வெகுமதி, மற்றும் பல ஆண்டுகளாகக் கைநழுவிப் போன வெற்றிகளுக்குப் பழிதீர்க்கும் தருணமாக இருந்தது. தீவிர கிறிஸ்தவரான ஜெமிமா, பின்னர் தான் “இயேசுவை இதயத்தில் வைத்து” விளையாடியதாகத் தெரிவித்தார், மேலும் இந்த ஆட்டத்தை “நம்பிக்கை மற்றும் பொறுமையின் பரிசு” என்றும் விவரித்தார். பெண்கள் உலகக் கோப்பை நாக்-அவுட் வரலாற்றில் அதிகபட்சமான, 339 ரன்கள் என்ற இந்தியாவின் சேஸ், ஜெமிமாவின் அமைதியான புத்திசாலித்தனமான சதம், ஹர்மன்பிரீத்தின் அதிரடியான அரைசதம் (88 பந்துகளில் 89 ரன்கள்) மற்றும் தீப்தி ஷர்மா (24), ரிச்சா கோஷ் (26) ஆகியோரின் முக்கிய பங்களிப்புகளால் சாத்தியமானது.முன்னதாக, ஆஸ்திரேலியா அணியில் போப் லிட்ச்ஃபீல்டின் 119 ரன்களும், எலிஸ் பெர்ரியின் 77 ரன்களும் எடுத்து அந்த அணி 338 ரன்களை எட்டச் செய்தன, ஆனால் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணியின் (2/49) பங்களிப்பால் இந்தியா ஓரளவுக்கு அவர்களைக் கட்டுப்படுத்தியது. இந்திய அணி வெற்றிக்கான கடைசி பவுண்டரி அடிக்கப்பட்டபோது, அது வெறும் வெற்றி அல்ல, விமோசனம் என்று ஆனது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, நாளை மறுநாள் (நவம்பர் 2) தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.