இந்தியா
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு: பொதுமக்கள் ஷாக்
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு: பொதுமக்கள் ஷாக்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. புதுவையில் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. மின்துறையின் வரவு -செலவு கணக்குகளை கணக்கிட்டு கட்டணத்தை உயர்த்த கோவாவில் உள்ள இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்துறை கோரிக்கை வைக்கும். கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்டு கட்டணத்தை உயர்த்த ஆணையம் அனுமதி அளிக்கும். ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு வழக்கமாக அமலுக்கு வரும். இந்த நிதியாண்டிற்கான (2024-25) கட்டணத்தை நிர்ணயிக்கும் விதமாக கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மின்கட்டணத்தை உயர்த்த புதுவை மின்துறை, இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. இதற்கிடையே கடந்த ஆண்டு (2024 )ஏப்ரல் மாதத்தில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுவை வந்து பொதுமக்களிடம் கருத்து கேட்டது. இதன்படி வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்ந்தது. 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.25-ல் இருந்து ரூ.2.70-ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25-ல் இருந்து ரூ.4-ஆகவும் , 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40-ல் இருந்து ரூ.6, 301 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80-ல் இருந்து ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மின்கட்டணத்தை உயர்த்த மின்துறை முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் புதுச்சேரியில் வீடுகளுக்கு மின்கட்டண மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, 0-100 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.2.70-யிலிருந்து ரூ.2.90-ஆக மின்கட்டணம் உயர்ந்தது. 101-200 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.4.00-லிருந்து ரூ.4.20 கட்டணம் உயர்ந்தது. 201-300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.6.00-லிருந்து ரூ.6.20 உயர்வு. 301-400 யூனிட்டிற்கு ரூ.7.50-லிருந்து ரூ.7.70 உயர்வு. 401-க்கு மேல் ரூ.7.50 ரூ.7.90 உயர்வு. யூனிட்டிற்கு 45 காசுகள் வரை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் தணிக்கை துறை தாக்கல் செய்த அறிக்கையில் புதுச்சேரி மின்துறையில் மட்டும் 257 முறைகேடு கையாடல் சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் மின்துறைக்கு ரூ.27 கோடியே 14 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தற்போது மின்கட்டணத்தை உயர்த்த இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்துதிடீரென மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி வீட்டு உபயோக கட்டணம் யூனிட்டுக்கு 20 காசுகள் அதிகரித்துள்ளது. இது அக்டோபர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மின் கட்டண உயர்வு குறித்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரியில் மின் கட்டணத்தை 20 காசுகள் உயர்த்த வேண்டும் என்று இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைசெய்துள்ளது. அந்த கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ள அரசு முடிவு எடுத்துள்ளது. இப்போதைக்கு நுகர்வோருக்கு மின்கட்டண உயர்வு இருக்காது. கடந்த ஆண்டும் இதே போல் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியது. ஆனால் அப்போதும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த ஆண்டு அரசே மானியமாக ரூ.30 கோடி வழங்கியது. தற்போது வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் யூனிட்டுக்கு 20 காசுகள் வீதம் அரசு ஏற்பதால் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.18 கோடி செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.