இலங்கை

மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் நிதி சேகரித்த நபரொருவர் கைது!

Published

on

மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் நிதி சேகரித்த நபரொருவர் கைது!

கத்தோலிக்க குருவின் உடையில் சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்ட   நபர் ஒருவர் மன்னாரில்  கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

Advertisement

மன்னார் மாவட்டத்தில் கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நபர் ஒருவரே கத்தோலிக்க குருக்கள் அணியும் ஆடையான வெள்ளை அங்கி மற்றும் கறுப்பு பட்டி அணிந்து தன்னை ஒரு கத்தோலிக்க குருவாக காண்பித்து  வீடுகளுக்கு சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். முத்தரிப்புத்துறை, வங்காலை போன்ற இடங்களில் அவர் நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு  ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு விதங்களில் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். சில இடங்களில் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு துறவற சபையாகிய அமலமரித் தியாகி குரு என்றும் வேறு சில இடங்களில் அங்கிலிக்கன் சபை குரு எனவும் கூறியுள்ளார்.

குறித்த நபர் நானாட்டாவில் உள்ள வங்கி ஒன்றில் பணத்தை வைப்பில் இட்டுள்ளார். அவர் பற்றிய தகவல் மன்னார் பொலிஸாருக்கு  அறிவிக்கப்பட்ட நிலையில் நானாட்டானில் இருந்து மன்னார் நகருக்கு அவர் பஸ்ஸில் வந்த வேளையில் மன்னார் பஸ் தரிப்பிடத்தில் வைத்து பொலிஸார் அவரை கைது செய்தனர். பொலிஸ் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்த பொலிஸார் அவர் உண்மையான குரு இல்லை என்பதையும் சிறியதொரு கிறிஸ்தவ சபை உறுப்பினர் என்பதையும் உறுதிப்படுத்தினர். அன்றைய தினம் பொலிஸ் தடுப்பில்  வைத்த பொலிஸார் மறுநாள் சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். 

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Advertisement

இதேவேளை இவ்வாறானவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மன்னார் ஆயர் இல்லம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version