பொழுதுபோக்கு
9 டேக் போன ஒரே காட்சி, வாய் மூடி சிரித்த ரஜினிகாந்த்; ஷூட்டிங்கில் கவுண்டமணி செய்த கலாட்டா!
9 டேக் போன ஒரே காட்சி, வாய் மூடி சிரித்த ரஜினிகாந்த்; ஷூட்டிங்கில் கவுண்டமணி செய்த கலாட்டா!
1992-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினி, விஜயசாந்தி, குஷ்பு, மனோரமா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மன்னன்’. சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். இப்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது கொண்டாடப்பட்டு வருகிறது.இந்தப் படத்தில் ரஜினி – கவுண்டமணி இருவரது காமெடி காட்சிகள் மிகவும் பேசப்பட்டவை. இப்போதும் தினமும் காமெடி சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தின் காமெடி காட்சிகளைப் படமாக்கும்போது, கவுண்டமணியின் கவுன்ட்டர் வசனங்களால் படக்குழுவினர் சிரிப்பில் மூழ்கியுள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காமெடி காட்சிகளும் கவுண்டமணியை இன்றும் புகழ வைக்கும் அளவிற்கு இருக்கும்.ரஜினியும் கவுண்டமணியும் விஜயசாந்தி நிறுவனத்தில் வேலை செய்து வருவார்கள். அப்போது, தொழிலாளியான கவுண்டமணி – ரஜினி இருவரும் விஜயசாந்தியிடம் பொய் சொல்லிவிட்டு திரையரங்கிற்கு படம் பார்க்க செல்வார்கள். முதல் டிக்கெட் எடுப்பவருக்கு செயின், 2-வது டிக்கெட் எடுப்பவருக்கு மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று திரையரங்கு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கும். இதனால் ரஜினியும் கவுண்டமணியும் மிகவும் கஷ்டப்பட்டு டிக்கெட் எடுப்பார்கள்.டிக்கெட் எடுத்துக் கொண்டு வெளியே வரும் காட்சியில் ரஜினி கண்ணாடி உடைந்து சட்டையை பிழிந்து அணிந்து கொள்வார். இந்த காட்சிகள் எல்லாம் ஒரிஜினல் ஸ்கிரிப்டில் இல்லையாம். அதேபோன்று, விஜயசாந்தியிடம் மோதிரமும், செயினும் பரிசாக வாங்கும் பொழுது இந்த கண்ணாடியும் போட்டுட்டு எவ்வளவு தைரியமா போஸ் கொடுக்கிற என்று ரஜினியை பார்த்து கவுண்டமணி கேட்பார். இந்த காட்சியும் ஸ்கிரிப்டில் இல்லாமல் கவுண்டமணி பேசியதுதான்.இப்படி இந்த படத்திற்காக ரஜினியும் கவுண்டமணியும் தங்கள் உழைப்பை போட்டிருப்பார்கள். அதேபோல், விஜயசாந்தி வீட்டின் முன்பு தொழிலாளிகள் எல்லாம் உண்ணாவிரதம் இருப்பார்கள். அந்தக் காட்சியைப் படமாக்கும்போது ரஜினி மிகவும் சீரியஸாக இருக்க வேண்டும். ஆனால், கவுண்டமணியோ கவுன்ட்டர் வசனங்கள் பேசிக் கொண்டே இருப்பார். அந்த காட்சியின் போது ரஜினி பல டேக்குகள் வாங்கியிருக்கிறார்.இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் பி.வாசு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “மன்னன் படத்தில் உண்ணாவிரதம் சீன் எல்லாம் எடுக்கவே முடியவில்லை. இப்போது அந்த படத்தை பார்த்தாலும் ரஜினி பின்னாடி திரும்பி சிரித்துக் கொண்டிருப்பார். 9 டேக் எடுத்தோம். அந்த காட்சியை” என்றார். ’மன்னன்’ படத்தின் உண்ணாவிரதம் காட்சிகள் எல்லாம் காலத்தால் அழியாத காட்சிகள். இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சிகள் அது.