பொழுதுபோக்கு
கரூர் சம்பவம் தனி நபர் மட்டும் பொறுப்பல்ல; திரை பிரமுகர்களுக்கு மட்டும் இது நடப்பது ஏன்? அஜித் கேள்வி
கரூர் சம்பவம் தனி நபர் மட்டும் பொறுப்பல்ல; திரை பிரமுகர்களுக்கு மட்டும் இது நடப்பது ஏன்? அஜித் கேள்வி
ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டி நாம் யார் என்பதைக் காட்ட கூடிய சமுதாயமாக மாறிவிட்டோம். இது முடிவுக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அந்த தனிநபர் மட்டும் பொறுப்பல்ல. இதற்கு நாம் அனைவருமே பொறுப்பு என்று நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார். இது குறித்து தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்குப் பேட்டியளித்த அஜித், “நான் யாரையும் குறை சொல்ல முயற்சிக்கவில்லை, ஆனால் இந்த நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த தனிப்பட்ட நபர் (விஜய்) மட்டும் இதற்குப் பொறுப்பல்ல, நாமெல்லோரும் தான் பொறுப்பு. இதில் ஊடகங்களுக்கும் ஒரு பங்கு உண்டு என்று நினைக்கிறேன். இன்று நாம் கூட்டத்தைச் சேர்ப்பதற்கும், அந்தக் கூட்டத்தைக் காட்டுவதற்கும் மிகவும் வெறி கொண்ட ஒரு சமூகமாக மாறிவிட்டோம். இவை அனைத்தும் முடிவுக்கு வர வேண்டும்.திரை நட்சத்திரங்களைச் சுற்றி ஏன் இத்தகைய குழப்பம் ஏற்படுகிறது? “கிரிக்கெட் போட்டிக்கு கூட்டம் செல்கிறது, அங்கு இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைப் பார்ப்பதில்லை, ஏன் திரையரங்குகளில் மட்டும் இது நடக்கிறது? ஏன் பிரபலங்கள், திரைப் பிரமுகர்களுடன் மட்டும் இது நடக்கிறது? இதன் விளைவு என்ன? இது ஒட்டுமொத்தத் திரையுலகையும், உலகம் முழுவதும், மோசமான வெளிச்சத்தில் காட்டுகிறது. அதாவது, ஹாலிவுட் நடிகர்கள் கூட இதை விரும்ப மாட்டார்கள் என்று அஜித்குமார் கூறியுள்ளார். கரூர் சம்பவம் ஏற்பட்ட துயரம் மற்றும் பொறுப்பு குறித்த விவாதங்களுக்கு மத்தியில் அஜித்தின் கருத்துக்கள் வந்துள்ளன. கரூர், வேலூசுவாமிபுரத்தில் நடந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பேரணியின்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ரசிகர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டிருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை அறிவித்தது. மேலும் சமீபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மகாபலிபுரத்திற்கு அழைத்து வந்து நேரில் சந்தித்த விஜய், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக அவரை சந்தித்த குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.