இந்தியா
புதுச்சேரி விடுதலை தினம்: ‘அடிமை தினமாக’ அனுசரித்த இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்
புதுச்சேரி விடுதலை தினம்: ‘அடிமை தினமாக’ அனுசரித்த இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூனில் எம்.ஜி.ஆர். சாலையில் அமைந்துள்ள விஜயகுமார் இல்லத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கிளை தொடங்கப்பட்டது. புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணியின் ஊழல்வாத ஆட்சியால் பாதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் விடுதலை பெறாத அடிமைகளே” என்ற கருப்பொருளுடன், புதுச்சேரி விடுதலை தினத்தன்று அடிமை தினம் அனுசரிக்கப்பட்டது.இந்நிலையில், அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் தலைமை தாங்கி பேசுகையில், “புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஊழல் மிகுந்த ஆட்சியில் நடைபெற்று வருகிறது. அதற்கு உதாரணமாக, 04.04.2025 அன்று மின் துறை வெளியிட்ட 177 கட்டுமான உதவிப் பணியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி, நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும் நிலையில் இருந்தது. ஆனால் காரைக்காலைச் சேர்ந்த சுமார் 80 விண்ணப்பதாரர்கள் முன்னணியில் இருப்பதை அரசு அறிந்த பிறகு, அவர்களில் 20 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும் வகையில், மற்ற 60 பேர்களின் நலனை பாதிக்கும் வகையில், பணி நியமன விதிகளை மோசடியாக மாற்றி விட்டது. இதன் அடிப்படையில் 13.09.2025 அன்று வெளியிடப்பட்ட அடுத்த அறிவிப்பையும், 28.10.2025 அன்று வெளிவந்த தவறான தற்காலிகத் தேர்வு பட்டியலையும் கொண்டு, காரைக்காலைச் சேர்ந்த பட்டியல் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைத் தேர்வு செய்யாமல், பலரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக ஊழல் நடைபெற்றுள்ளது.மத்திய மற்றும் மாநில அரசின் விதிகளை மீறியும், உச்சநீதிமன்ற ஆணைகளை அவமதித்தும், தகுதியற்ற விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் பெற்று பாரபட்சமாகவும், குறுக்குவழியாகவும் அந்த பதவிகளை அபகரித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) விசாரணை மேற்கொள்ள பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநர் நேர்மையுடன் உத்தரவிட வேண்டும்.இதேபோல், வேளாண் துறை இயக்குநர் பதவி நியமனம், மாதுர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி நியமனங்களிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. அன்றாடம் ஊழல் நடைபெற்று வருகிறது. அதனால், விடுதலை தினத்திற்கு பதிலாக அடிமை தினம் அனுசரித்தோம். இந்த நிலையை மாற்ற சி.பி.ஐ. தனது பணியை நேர்மையாகவும் செம்மையாக செய்ய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக வினோத் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் இறுதியில் முருகானந்தம் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.