இந்தியா

முதல்வர் மூலம் அதிகம் சாதிக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்: அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுக்கு கிளம்பிய எதிர்ப்பு

Published

on

முதல்வர் மூலம் அதிகம் சாதிக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்: அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுக்கு கிளம்பிய எதிர்ப்பு

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்த கூறினாலும், அதற்கான தொகையை மானியமாக அரசு செலுத்திவிடும். கடந்த ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தக்கூறிய போது மக்களிடம் கட்டணத்தை வசூலிக்காமல் அரசே மானியம் செலுத்தியது. அதே நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்படும்.இதனால் மின் கட்டண உயர்வு பொதுமக்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பழைய கட்டணமே தொடருகிறது. பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தாத காரணத்தால் என்.ஆர்.காங்கிரஸ் அதில் இருந்து விலகி தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டுமென முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு காரைக்கால் தி.மு.க எம்.எல்.ஏ. கூறியிருக்கிறார். ஆனால், முதல்-அமைச்சர் அலுவலகத்தில் மறைமுகமாக தி.மு.க. எம் எல் ஏக்கள் அதிகமாக காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள். இந்த ஆட்சியிலும் முதல்-அமைச்சரிடமும் அதிக பலனை தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் தான் அனுபவித்து வருகிறார்கள். யார் யாருடன் கூட்டணி சேர வேண்டும் என அந்தந்த கட்சி தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள். அதற்கு இப்போது அவசியம் ஏற்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்படி வந்தால் தான் மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற முடியும். மாற்றுக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆட்சியின்போது, இதே அவலம் தான் தொடர்ந்தது. அந்த ஆட்சியில் நானும் இருந்தேன் என்ற முறையில் கூறுகிறேன். மாற்றுக் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் பொது மக்களுக்கான நலத்திட்டங்களை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையேஎந்த கருத்து வேறுபாடும் இல்லை.  அனைவரும் ஒன்றாகத்தான் விழாவில் கலந்து கொண்டு உரையாடினோம். கவர்னரின் ஒப்புதலோடு தான் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.இந்த தீபாவளிக்கு கூட பொதுமக்களுக்கு கவர்னரின் ஒப்புதலோடு தான் தீபாவளி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. சில கோப்புகளுக்கு கவர்னர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்புகிறாரே தவிர, அவர் மறுக்கவில்லை. அதனால் கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் கருத்து வேறுபாடு என்பது தவறானது. காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஒருவர் புதுவை மின்துறை, கல்வித்துறை குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறு தகவல்களை பரப்பி வருகிறார்.  இவ்வாறு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.கல்வித்துறையில் கடந்த 15 ஆண்டு காலத்தில் செய்ய முடியாத பல காரியங்களை இப்போது நிறைவேற்றி உள்ளோம். 700 ஆசிரியர் காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மின்துறையில் உதவிப்பொறியாளர், கட்டுமான உதவியாளர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த அரசுபொறுப்பேற்ற பிறகு எந்த தவறுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அனைத்து காலிப்பணியிடங்களும் வெளிப்படைத்தன்மையோடு, நேர்மையோடு நிரப்பி வருகிறோம்.” என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி மூலம் தி.மு.க. எம். எம்.எல்.ஏ-க்கள் அதிகமாக சாதித்துக் கொள்கிறார்கள் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து இருப்பது தி.மு.க வட்டாரத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version