இலங்கை

வவுனியாவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்ட ஆற்றுச்சருக்கைகள்

Published

on

வவுனியாவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்ட ஆற்றுச்சருக்கைகள்

மழை காலங்களில் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்பட்ட வவுனியா மாவட்டத்தின் பிரமனாலன்குளம் – பரப்புக்கடந்தான் வீதியில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக அமைக்கப்பட்ட இரண்டு ஆற்றுச்சருக்கைகளை (causeway) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மக்கள் பாவனைக்கு கையளித்தார்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில், ரூ. 45.49 மில்லியனில் இந்த இரண்டு ஆற்றுச்சருக்கைகளும் முழுமையாக வீதி அபிவிருத்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட அலுவலகத்தின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

Advertisement

90 மீற்றர் நீளம், 4 அடி விட்டமுடைய 12 கற்காரைக் குழாய்கள் கொண்டமைந்த ஆற்றுச்சருக்கை 29.63 மில்லியன் ரூபாவிலும், 100 மீற்றர் நீளம், 3 அடி விட்டமுடைய 5 கற்காரைக் குழாய்கள் கொண்டமைந்த ஆற்றுச்சருக்கை 15.86 மில்லியன் ரூபாவிலுமாக இருவேறு ஒப்பந்தகாரர்கள் ஊடாக உரிய காலப்பகுதியினுள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கையளிப்பு நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காலத்தில்தான் கிராமிய வீதிகளை – இணைப்பு வீதிகளை அபிவிருத்தி செய்ய முடியும்.

அரசாங்கம் அதற்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் நீளமான வீதிகள் ஏராளம் திருத்தப்பட வேண்டியுள்ளன.

Advertisement

இந்த அரசாங்கத்தின் காலத்தில் இன்னும் 3 ஆண்டுகளுக்குள் அனைத்து வீதிகளையும் சீரமைத்து முடிக்கக் கூடியதாக இருக்கும் என நம்புகின்றேன்.

இந்த வீதியின் ஆற்றுச்சருக்கைகளை மிகச் சிறப்பாக அமைத்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர், நிறைவேற்றுப் பொறிறியலாளர் உள்ளிட்ட அவர்களது குழுவினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோல உரிய காலத்தினுள் நிறைவேற்றி ஒத்துழைத்த ஒப்பந்தகாரர்களும் நன்றிகள், என்றார் ஆளுநர்.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கமக்கார அமைப்பின் தலைவர், இந்த வீதி மன்னார் மாவட்டத்தின் மடுத் திருத்தலத்துக்குச் செல்லும் முக்கியமான வீதி. அதைப்போல நாம் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு தேவைகளை நிறைவேற்றச் செல்லும் பிரதான வீதி. மழை காலத்தில் இந்த வீதியால் நாம் செல்ல முடியாது. இதுவரை காலமும் இதைச் செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. இப்போது புனரமைக்கப்பட்டுள்ளமையை வரவேற்கின்றோம், எனக் குறிப்பிட்டார்.

Advertisement

இன்றைய இந்த நிகழ்வில் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி வி.அபிராமி, வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் கே.கௌசிகன், நிறைவேற்று பொறியியலாளர் வவுனியா மற்றும் மன்னார், தொழில்நுட்ப உத்தியோகத்தர், கிராம அலுவலர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version