இந்தியா
இந்திய இளைஞனுக்கு கனடாவில் சிறை!
இந்திய இளைஞனுக்கு கனடாவில் சிறை!
கடந்த 2022ஆம் ஆண்டு கனடாவில் இடம் பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி, போலேவார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் 38 வயதான விஷால் வாலியா என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன் வாகனம் ஒன்றை தீவைத்த விட்டு தப்பி சென்றதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார் ,சம்பவத்துடன் தொடர்புடைய இக்பால் காங்க், டீன்ரே பாப்டிஸ்ட், மற்றும் பல்ராஜ் பஸ்ரா ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். இச் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இக்பால் காங்க் மற்றும் டீன்ரே பாப்டிஸ்ட் ஆகிய இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் இருவருக்கும் 17 வருடங்கள் சிறை தண்டனையும்,வாகனத்திற்கு தீ வைத்த குற்றத்திற்காக மேலதிகமாக 5 வருடங்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கில் மூன்றாவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இந்திய வம்சாவளி இளைஞர் பல்ராஜ் பஸ்ராவின் தண்டனை விவரங்களை பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் நேற்றைய தினம் அறிவித்தது. அதன்படி, பல்ராஜ் பஸ்ராவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.