இந்தியா
விண்ணில் பாய்ந்தது ‘பாகுபலி’ ராக்கெட்… 4,410 கிலோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!
விண்ணில் பாய்ந்தது ‘பாகுபலி’ ராக்கெட்… 4,410 கிலோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!
உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட, புதிய தலைமுறை ‘பாகுபலி’ ராக்கெட் மூலம், இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள், திட்டமிட்டபடி அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ (ISRO) தெரிவித்துள்ளது.சி.எம்.எஸ்-3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தகவல்தொடர்பு செயற்கைக்கோள், 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்டது. இது எல்.வி.எம்.3 எம்-5 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த அரிய சாதனையை இந்திய விண்வெளி ஆய்வு மையம் இதன்மூலம் நிகழ்த்தியுள்ளது. சி.எம்.எஸ்-3 என்பது ஒரு மல்டி-பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இது இந்திய நிலப்பரப்பு உட்பட பரந்த கடல் பகுதியில் சேவைகளை வழங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் (GTO) துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. மேலும், 2013-ல் ஏவப்பட்ட ஜிசாட் 7 தொடர் செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக இது செயல்படும்.இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில், “ஏவுகணை வாகனம், தகவல் தொடர்பு செயற்கைக்கோளைத் தேவையான சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தியது. 4 ஆயிரத்து 410 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது” என்றார். ஏவுதலுக்குப் பின் மிஷன் கண்ட்ரோல் மையத்தில் இருந்து உரையாற்றிய அவர், எல்.வி.எம்-3 ராக்கெட்டின் அதிக எடையைச் சுமக்கும் திறனைக் குறிக்கும் வகையில், அதனை ‘பாகுபலி’ என்று குறிப்பிட்டார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஇந்த ராக்கெட்டின் முந்தைய ஏவுதல், “நாட்டிற்கு பெருமை சேர்த்த மிகவும் மதிப்புமிக்க சந்திரயான் 3” என்பதை நினைவுகூர்ந்த அவர், “அதிக எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை” வெற்றிகரமாகச் செலுத்தியதன் மூலம், இந்தியா மீண்டும் ஒரு பெருமையை அடைந்துள்ளதாக அவர் கூறினார். எல்.வி.எம்-3 ராக்கெட்டின் சோதனை ஓட்டம் உட்பட அனைத்து 8 ஏவுதல்களும் முழுமையாக வெற்றி பெற்று, 100% வெற்றி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.”இந்த செயற்கைக்கோள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்குத் தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ‘ஆத்மநிர்பர் பாரத்’ (தற்சார்பு இந்தியா) திட்டத்திற்கு மற்றுமொரு ஒளிரும் உதாரணமாகும்” என்று விண்வெளித் துறையின் செயலாளருமான நாராயணன் மேலும் கூறினார். சாதகமற்ற வானிலை காரணமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் இத்திட்டத்தில் சவாலான நேரத்தை எதிர்கொண்டனர், ஆனாலும் அவர்கள் கடினமாக உழைத்து வெற்றியை உறுதி செய்தனர் என்றும் அவர் பாராட்டினார்.ஞாயிற்றுக்கிழமை ஏவுவதற்கு முன்பு வரை, அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏரியன்ஸ் பேஸ் நிறுவனத்தின் ‘ஏரியன்’ ராக்கெட்டுகளை இஸ்ரோ பயன்படுத்தி வந்தது. அவை பிரெஞ்சு கயானாவில் உள்ள கௌரவ் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டன. 2018-ம் ஆண்டு டிச.5 ஆம் தேதி, இஸ்ரோவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளான GSAT-11 (5,854 கிலோ), ஏரியன்-5 ராக்கெட் மூலம் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்பட்டது. தற்போது, எல்.வி.எம்.3-எம்5 ராக்கெட் மூலம், 4,000 கிலோ வரையிலான கனரக தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை ஏவுவதில் இஸ்ரோ முழுமையான தற்சார்பு நிலையை எட்டியுள்ளது.’பாகுபலி’ எல்.வி.எம்-3 ராக்கெட்டின் சிறப்பம்சங்கள்இந்த ராக்கெட்டானது, இஸ்ரோ விஞ்ஞானிகளால் ஜியோசின்க்ரோனஸ் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (GSLV) MkIII என்றழைக்கப்படுகிறது. இது 3 நிலை ஏவுகணை வாகனமாகும். இதில் 2 திட எரிபொருள் உந்துவிசைக் கலன்கள் (S200), ஒரு திரவ உந்துசக்தி கொண்ட கோர் ஸ்டேஜ் (L110) மற்றும் ஒரு கிரையோஜெனிக் ஸ்டேஜ் (C25) ஆகியவை உள்ளன. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட C25 கிரையோஜெனிக் ஸ்டேஜ் உட்பட, இந்த ராக்கெட் அனைத்து ஏவுதல்களிலும் வெற்றி கண்ட சாதனையைக் கொண்டுள்ளது. இதன் முதல் மேம்பாட்டுப் பயணம் டிசம்பர் 2014 இல் (CARE மிஷன்) நடைபெற்றது.வரவிருக்கும் லட்சியத் திட்டமான ‘ககன்யான்’ (Gaganyaan Mission) திட்டத்திற்கும், மனிதர்களை அனுப்பத் தகுதி பெற்ற LVM3 ராக்கெட்டையே (HRLV எனப் பெயரிடப்பட்டுள்ளது) இஸ்ரோ பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த எல்.வி.எம்-3 ராக்கெட், GTO சுற்றுப்பாதைக்கு 4,000 கிலோ எடையையும், குறைந்த பூமி சுற்றுப்பாதைக்கு (LEO) 8,000 கிலோ எடையையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது.இஸ்ரோவின் மற்ற ராக்கெட்டுகள்இஸ்ரோ விஞ்ஞானிகள், திட்டத்தின் நோக்கங்கள், இலக்கு சுற்றுப்பாதை ஆகியவற்றைப் பொறுத்து ஏவுகணை வாகனங்களை வகைப்படுத்தி உள்ளனர். பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, மற்றும் எல்.வி.எம்-3 ஆகியவை இஸ்ரோவால் பயன்படுத்தப்படுகின்றன.பி.எஸ்.எல்.வி: இஸ்ரோவின் நம்பகமான ‘வேலைக்காரன்’ (workhorse) என்றழைக்கப்படுகிறது. இது சுமார் 1,750 கிலோ எடையைச் சுமக்கும்.எஸ்.எஸ்.எல்.வி: 500 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை குறைந்த பூமி சுற்றுப்பாதையில் (LEO) நிலைநிறுத்தப் பயன்படுகிறது.ஜி.எஸ்.எல்.வி: சுமார் 2,200 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லப் பயன்படுகிறது.எல்.வி.எம்-3: 4,000 கிலோவுக்கு மேல் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் திறனை அளிப்பதன் மூலம், இஸ்ரோவின் திறனை பன்மடங்கு அதிகரித்துள்ளது.