தொழில்நுட்பம்
2.6 பில்லியன் வருட பழமையான நீர்… கனடா சுரங்கத்தில் கண்டுபிடிப்பு! சுவைத்துப் பார்த்து திகைத்த விஞ்ஞானிகள்!
2.6 பில்லியன் வருட பழமையான நீர்… கனடா சுரங்கத்தில் கண்டுபிடிப்பு! சுவைத்துப் பார்த்து திகைத்த விஞ்ஞானிகள்!
கனடாவில் உள்ள ஒரு சுரங்கத்தின் அடியில், மண்ணுக்குள் பல மைல்கள் ஆழத்தில், விஞ்ஞானிகள் எதிர்பராத ஓர் அற்புதம் காத்திருந்தது. அது, சுமார் 2.6 பில்லியன் ஆண்டுகளாக பூமிக்கு அடியில் அடைபட்டு கிடந்த நீர். இந்த கண்டுபிடிப்பு, அதன் இமாலய வயதால் ஆராய்ச்சியாளர்களை திணறடித்தது மட்டுமல்லாமல், மிகவும் சவாலான, சூரிய ஒளியே இல்லாத இடங்களில் கூட உயிர்கள் நிலைத்திருக்க முடியும் என்ற மகத்தான உண்மையை நிரூபித்தது. ‘நேச்சர்’ அறிவியல் இதழில் வெளியான இந்த ஆய்வு, பூமியின் ஆழமான ரகசியங்களையும், மற்ற கிரகங்களில் உயிர் இருக்கிறதா என்ற கேள்விக்கான பதிலையும் தேடும் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.புவியியலாளர் பேராசிரியர் பார்பரா ஷெர்வுட் லோலார் தலைமையிலான குழு, 2016-ம் ஆண்டு, பூமியின் மறைந்திருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளைத் தேடி, கனடாவின் சுரங்கம் ஒன்றில் சுமார் 3 கிலோமீட்டர் ஆழம் வரை துணிந்து சென்றது. அங்கே அவர்கள் கண்டது, சாதாரண நீர் அல்ல; பாறையிலிருந்து தொடர்ந்து குமிழியிட்டு, லிட்டர் கணக்கில் வெளியேறிக்கொண்டிருந்த ஒரு நீரூற்று. “இந்த நீரைப் பற்றி நினைக்கும்போது, அது பாறைக்குள் சிக்கியிருக்கும் ஒரு சிறு துளி என்றுதான் பொதுவாக நினைப்பார்கள்,” என்று ஷெர்வுட் லோலார் கூறுகிறார். “ஆனால், இது உண்மையிலேயே பெரியளவில், நிமிடத்திற்கு பல லிட்டர் என்ற வேகத்தில் வெளியே வந்து கொண்டிருந்தது. நீரின் அளவு நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக இருந்தது.”இந்த நீரின் வயது ஒருபுறம் இருக்க, இதில் இருந்த உயிரியல் ஆச்சரியம்தான் விஞ்ஞானிகளை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த மிகப் பழமையான திரவத்தில், சல்பேட்டின் சுவடுகள் காணப்பட்டன. இதை ஆய்வு செய்தபோது, இது பாறையிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சை (Radiation) ஆற்றலாகப் பயன்படுத்திக் கொண்டு, பில்லியன் கணக்கான ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்த நுண்ணுயிரிகள் விட்டுச் சென்ற “ரசாயன கைரேகை” என ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர்.பேராசிரியர் லோலார்: “இந்த நீரின் சல்பேட்டைப் பார்த்தபோது, அது உயிர்கள் இருந்ததைக் குறிக்கும் அடையாளத்தைக் காட்டியது. இது ஏதோ ஒரே இரவில் நடந்திருக்க முடியாது. புவியியல் கால அளவில் (Geological Timescale) உயிரினங்கள் இந்தத் திரவங்களில் இருந்திருப்பதற்கான அசைக்க முடியாத ஆதாரம் இது.”இந்தக் கண்டுபிடிப்பின் தாக்கம் பூமிக்கு அப்பாலும் நீள்கிறது. சூரிய ஒளியோ, பூமியின் மேற்பரப்புத் தாக்கமோ இல்லாமல், கடும் அழுத்தத்தில் இந்த நுண்ணுயிரிகள் செழித்து வளர்ந்திருப்பது, செவ்வாய் (Mars), ஐரோப்பா (Europa) மற்றும் என்செலடஸ் (Enceladus) போன்ற கிரகங்களின் மேற்பரப்புக்கு அடியில் உள்ள கடல்களிலும் உயிர் இருக்கக்கூடும் என்ற கருத்துக்குப் பலம் சேர்க்கிறது. இந்த பண்டைய நீர், வேற்று கிரகச் சூழலின் வேதியியலுக்கு ஒரு கண்ணாடி போல செயல்படுகிறது!விஞ்ஞானிகளின் ஆய்வில், இந்த நீரில் உள்ள சல்பேட், மேற்பரப்பு நீரிலிருந்து வரவில்லை; மாறாக, நீருக்கும் அதைச் சுற்றியுள்ள பாறைக்கும் இடையே நிகழும் இரசாயன எதிர்வினையால் அந்த இடத்திலேயே தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்பது தெரிய வந்தது. அதாவது, நீர் மற்றும் பாறை இருக்கும் வரை, இந்த உயிர் தாங்கும் வேதியியல் அமைப்பு முடிவில்லாமல் நீடித்து நிலைக்கும். சூரிய ஒளி மட்டுமே உயிர்க்கான ஆதாரம் இல்லை; பாறை-நீர் இடைவினையிலிருந்து உருவாகும் இரசாயன ஆற்றலும் முழு சுற்றுச்சூழல் அமைப்பைத் தக்கவைக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது.இவ்வளவு பெரிய அறிவியல் கண்டுபிடிப்புக்குப் பிறகு, பொதுமக்களின் மனதில் ஒரு சுவாரசியமான கேள்வி எழுந்தது: 2.6 பில்லியன் வருடப் பழமையான நீர் எப்படி இருக்கும்? விஞ்ஞானி பார்பரா ஷெர்வுட் லோலார், சும்மா இருக்கவில்லை. தனது விரலை அந்தப் பண்டைய நீரில் நனைத்து, ஒரு துளி சுவைத்துப் பார்த்தார். அந்த அனுபவத்தை அவர் விவரிக்கையில், அது “மிக உப்புத்தன்மை உடையதாகவும், கசப்பாகவும்” இருந்ததாகக் கூறினார். அது கடல்நீரை விடப் பல மடங்கு உப்பாக இருந்தது. பல மில்லியன் ஆண்டுகளாக பாறைகள் மற்றும் கனிமங்களுடன் வினைபுரிந்ததன் விளைவு அது.அந்த எளிய செயல், பல பில்லியன் வருடப் புவியியல் கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைத்தது. மனித இனம் பூமியின் மிகப் பழமையான நீரைச் சுவைத்த அந்த கணம், நமது பூமி இன்னும் ஏராளமான வரலாறுகளை, அதன் ஆழத்தில் ரகசியமாகப் பூட்டி வைத்திருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறது.