இந்தியா
அரசு பேருந்து மீது ஜல்லி லாரி மோதல்: உடல் நசுங்கி 19 பேர் பலி – தெலங்கானாவில் சோகம்
அரசு பேருந்து மீது ஜல்லி லாரி மோதல்: உடல் நசுங்கி 19 பேர் பலி – தெலங்கானாவில் சோகம்
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம், செவெல்லா பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற லாரி அரசுப் போக்குவரத்துக் கழக (SRTC) பேருந்து மீது மோதிய கோர விபத்தில், 10 மாத குழந்தை மற்றும் 10 பெண்கள் உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.மாநில நெடுஞ்சாலையில், தந்தூரிலிருந்து செவெல்லா நோக்கிச் சென்ற அந்தப் பேருந்தில் 72 பேர் பயணம் செய்துள்ளனர். இன்று காலை 7:30 மணியளவில் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான செவெல்லா அருகே வந்தபோது, எதிர்திசையில் அதிவேகமாக வந்த லாரி, பேருந்தின் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஹைதராபாத் காவல்துறையின் தகவல்படி, பேருந்து ஓட்டுநர் மற்றும் சம்பவ இடத்திலேயே 8 பயணிகள் உட்பட மொத்தம் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். பேருந்தின் ஓட்டுநர், ஒரு பெண் நடத்துநர் (RTC), காயமடைந்த மற்ற பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். லாரி மோதிய வேகத்தில் அதில் இருந்த ஜல்லி கற்கள் பேருந்தின் மீது கொட்டின. இது நிலைமையை மேலும் மோசமாக்கி, அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமானது என்று ஹைதராபாத் காவல்துறை அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஸிடம் தெரிவித்தார்.பிரதமர் மோடி இரங்கல்; நிதியுதவி அறிவிப்புஇந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ. 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.”தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது எண்ணங்கள் ஆறுதலாக உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்,” என்று பிரதமர் அலுவலகம் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.விபத்துக்குள்ளான பேருந்து, தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் (TSRTC) தனியார் நிறுவனத்திடமிருந்து டெண்டர் மூலம் வாடகைக்குப் பெறப்பட்டது என்று அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர். டெண்டர் அடிப்படையில்தான் நாங்க பேருந்தை வாடகைக்கு எடுத்தோம். நடத்துநர் மட்டுமே போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்டனர், ஓட்டுநர் தனியார் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டவர் என்று செவெல்லாவில் உள்ள போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஸிடம் உறுதிப்படுத்தினார்.தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவுஇதனிடையே, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு” அறிவுறுத்தினார். காயமடைந்த அனைவருக்கும் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ஹைதராபாத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ண ராவ் மற்றும் டிஜிபி சிவதர் ரெட்டி ஆகியோருக்கு ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார். உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் செல்லவும், ரங்கா ரெட்டி மாவட்ட ஆட்சியர் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.காயமடைந்தவர்களுக்கு போதுமான சிகிச்சை அளிக்க காந்தி மற்றும் உஸ்மானியா மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும் முதல்வர் உத்தரவிட்டார். கவலைக்கிடமாக உள்ள அனைவரையும் காப்பாற்ற மருத்துவக் குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.அமைச்சர் ஸ்ரீதர் பாபு நேரில் ஆய்வுதெலங்கானா ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சரும், ரங்கா ரெட்டி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான துட்டில்லா ஸ்ரீதர் பாபு, இந்த விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தினார். அவர் உடனடியாக ரங்கா ரெட்டி மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தார்.”விபத்து எப்படி நடந்தது மற்றும் காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை கேட்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவர் வழிகாட்டுதல்களை வழங்கினார், மேலும் அதிகாரிகள் தாமதமின்றி விபத்து நடந்த இடத்தை அடைந்து மீட்புப் பணிகளை நேரில் மேற்பார்வையிட வேண்டும்,” என்று அமைச்சரின் அறிக்கை தெரிவித்தது.செவெல்லா அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு “சாத்தியமான சிறந்த சிகிச்சையை” உறுதி செய்யுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். நிலைமையைக் கண்காணிக்கவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் அவர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் உறுதுணையாக நிற்கும் என உறுதியளிக்குமாறும், காயமடைந்த ஒவ்வொருவர் பற்றிய முழுத் தகவலும் உடனடியாக அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.