விளையாட்டு
தோனியிடம் வாக்குமூலம் சரியே… மான நஷ்ட ஈடு கோரிய வழக்கில் ஐகோர்ட் கருத்து
தோனியிடம் வாக்குமூலம் சரியே… மான நஷ்ட ஈடு கோரிய வழக்கில் ஐகோர்ட் கருத்து
இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டன்களுள் முக்கியமானவராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி நடத்திய அனைத்து வடிவ போட்டிகளிலும் கோப்பைகளை வென்று சாதனையை படைத்துள்ளது. இதேபோல், இவரது தலைமையிலான ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடியுள்ளது. 6-வது பட்டத்திற்கான தேடலில் இருக்கிறது. இந்நிலையில், 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி தொடர்ந்த வழக்கில், எம்.எஸ் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமனத்தை எதிர்த்து ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.வழக்கு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்தார். இந்த சூழலில், தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். கருத்துஇந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷஃபிக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பத்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் வாக்குமூலத்தை பதிவு செய்ய தோனி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார். வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முதலமைச்சர் மற்றும் பல்வேறு பிரபலங்கள் நீதிமன்றத்திற்கு வரும் போது தோனிக்கு மட்டும் என்ன சிக்கல் ? கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்து தோனி சட்டத்தை பின்பற்றுவதில்லை எனவும் கூறினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தோனி ஒரு தேசிய அளவிலான பிரபலமாக இருக்கக்கூடிய கிரிக்கெட் வீரர். அவர் நீதிமன்றத்திற்கு வந்தால் நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதோடு, பல்வேறு ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கும் என தெரிவித்தனர். வழக்கறிஞர் ஆணையர் மூலம் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது சம்பத்குமாரோ அல்லது அவரது வழக்கறிஞரோ இருப்பார்கள் என்பதால் அவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனக்கூறிய நீதிபதிகள், வழக்கறிஞர் ஆணையர் நியமித்ததில் எந்த தவறும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.