இந்தியா
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் – திரும்ப பெறக்கோரி இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் – திரும்ப பெறக்கோரி இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து புதுச்சேரி அரசு அந்த மின்கட்டண உயர்வை மானியமாக ஏற்றது. இந்த நிலையில் அக்டோபர் 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு மீண்டும் மின்கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா வீதம் உயர்த்தப்பட்டது. ஒரே ஆண்டில் 2 முறை மின்கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடந்த முறை போல இந்த முறையும் மின்கட்டண உயர்வை அரசே மானியமாக ஏற்கும் என அறிவித்துள்ளார். இதனை கண்டித்தும் மின்கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும் இந்தியா கூட்டணி கட்சியினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபடனர். மிஷன் வீதி ஜென்மராக்கினி கோயில் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, தி.மு.க அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலர் சலீம், விடுதலைச்சிறுத்தைகள் முதன்மை செயலர் தேவபொழிலன், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில செயலர் ராமசந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலம் மிஷன் வீதி, அம்பலத்து மடையார் வீதி வழியாக தலைமை செயலகம் நோக்கி வந்தது. அப்போது ஆம்பூர் சாலை அருகே போலீசார் தடுப்பு கட்டை அமைத்து தடுத்தனர். இதையடுத்து அங்கு இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.