பொழுதுபோக்கு
போலீஸ் கமிஷனருக்கு பறந்த கடிதம்… ஜாய் கிறிஸில்டா புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பாயும் நடவடிக்கை; விரைவில் கைது?
போலீஸ் கமிஷனருக்கு பறந்த கடிதம்… ஜாய் கிறிஸில்டா புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பாயும் நடவடிக்கை; விரைவில் கைது?
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த திருமண மோசடி புகார், தற்போது மாநில மகளிர் ஆணையத்தின் தீவிர கவனத்தைப் பெற்றுள்ளது. ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை ஆணையருக்கு மகளிர் ஆணையம் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது.ஜாய் கிரிசில்டா கடந்த செப்டம்பர் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், “ரங்கராஜ் என் கணவர். நாங்கள் திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். தற்போது என்னைத் தவிர்த்துவிட்ட அவர், நான் நேரில் சந்திக்க முயன்றபோது அடித்து விரட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவரே தந்தை. அவர் எனக்கும் குழந்தைக்கும் பொறுப்பேற்று என்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.காவல்துறையின் நடவடிக்கை திருப்தியளிக்காத நிலையில், ஜாய் கிரிசில்டா முதல்வர் தனிப்பிரிவிலும், பின்னர் மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இரு தரப்பிடமும் விசாரணை நடத்திய மகளிர் ஆணையம், ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜரான ரங்கராஜ், இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அங்கேயே பார்த்துக் கொள்வதாகக் கூறிய தகவல் வெளியானது.இந்நிலையில், தனக்கும் குழந்தைக்கும் மாதந்தோறும் ரூ.6.50 லட்சம் பராமரிப்புத் தொகை வழங்கக் கோரி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் சாயலில் இருப்பதாக ஒரு புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். மகளிர் ஆணையம் தற்போது உறுதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளதால், இந்த விவகாரத்தில் சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.