விளையாட்டு
ஆசிய அளவிலான பேட்மிண்டன் போட்டி: சாதனை படைத்த புதுச்சேரி மாணவிக்கு உற்சாக வரவேற்பு
ஆசிய அளவிலான பேட்மிண்டன் போட்டி: சாதனை படைத்த புதுச்சேரி மாணவிக்கு உற்சாக வரவேற்பு
புதுச்சேரியின் காரைக்கால் அக்கம்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ் – கீதாமணி மகள் ஜனனிகா. இவர் தருமபுரம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.வி.எஸ் தனியார் உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பேட்மிண்டனில் ஆர்வம் கொண்ட மாணவி ஜனனிகா, தென்னிந்திய அளவில் கோயமுத்தூர் மற்றும் ஆந்திராவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து வெற்றி பெற்றார்.இதனை தொடர்ந்து, தென் மண்டல அளவிலான பேட்மிண்டன் போட்டியிலும், ஐதராபாத்தை அடுத்த பஞ்ச்குலா மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்திந்திய அளவிலான இரு பாலருக்கான பேட்மிண்டன் போட்டியில் இரண்டாம் இடம் வெற்றி பெற்றார். இதன் மூலம், சீனாவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட ஆசிய அளவிலான பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வானார். இதில் களமாடிய மாணவி ஜனனிகா வெண்கல பதக்கத்தை பெற்று சாதனை படைத்தார்.பதக்கத்தை வென்ற மாணவி ஜனனிகா அவர்கள் இன்று (05.11.2025) காலை 9.30 மணி அளவில் தாயகம் திரும்பி காரைக்கால் வந்தார். காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் மாணவி ஜனனிகாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என் திருமுருகன் தலைமையில் மாணவி ஜனனிகாவிற்கு மாலை அணிவித்து சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பை அளிக்கப்பட்டதுடன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். தாசில்தார் செல்லமுத்து, காரைக்கால் மேல்நிலைக்கல்வி துணை இயக்குநர் ஜெயா, காரைக்கால் மீனவ பஞ்சாயத்தார்கள், மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மாணவி ஜனனிகாவிற்கு மாலைகள், சால்வை அணிவித்தும் மலர் தூவி செண்டை மேளம் முழங்க காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய மாணவி ஜனனிகாவின் வெற்றி ஊர்வலம் பாரதியார் வீதி வழியாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி ஜனனிகாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஏ.எஸ்.பி.எஸ் ரவி பிரகாஷ் தலைமையில் சால்வை அணிவித்து மலர் கொத்துகள் கொடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் மற்றும் அவர்களின் சார்பிலும் வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தனர். பாராட்டு விழாவில் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா, காரைக்கால் சார்பு ஆட்சியர் எம். பூஜா, காரைக்கால் செய்தி மற்றும் விளம்பரத்துறை துணை இயக்குனர் முனைவர் குலசேகரன் உள்ளிட்டோர் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பதக்கம் வென்ற மாணவி ஜனனிகா செய்தியாளர்களிடம் பேசியதாவது: – எனது வெற்றிக்கு முழு காரணமான பயிற்சியாளர் தக்ஷிணாமூர்த்தி,பெற்றோர்,என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது மூத்த வீரர்களின் ஒத்துழைப்போடு, பள்ளி முதல்வர் சித்ரா கிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலர்களால் என்னால் வெற்றிபெற முடிந்தது. புதுச்சேரிக்கு என்று பிரத்தியேகமாக அசோசியேஷன் அமைக்க வேண்டும். அசோசியேஷன் இல்லாததால் எங்களால் மாநில அளவிலான, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. எனவே அசோசியேஷன் அமைத்து போதிய உதவிகளை புதுச்சேரி அரசு செய்து தர வேண்டும். அரசு அனைத்து உதவிகளையும் செய்தால் என்னைப் போன்ற பல வீரர்கள் வெளியே வருவார்கள். இந்தியாவிற்காக தொடர்ந்து நான் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதை எனது கனவு. மாணவர்கள் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், வெற்றிக்கான பாதையில் தொடர்ந்து சென்றால் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்று மாணவி ஜனனிகா கூறினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆசிய அளவிலான போட்டியில் இந்தியாவிற்காக பங்கேற்று பதக்கம் வென்ற மாணவி ஜனனிகாவிற்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது காரைக்கால் மாவட்டத்தில் கிடைத்த மிகப்பெரிய சாதனையாகவும் மைல் கல்லாகவும் கருதப்படுகிறது. மாணவி தொடர்ந்து தேசிய அளவிலான மற்றும் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்காக பதக்கங்களை வெல்ல வேண்டும். மாணவியின் வெற்றிக்காக பயிற்சியாளர் பல்வேறு தியாகங்களையும் முயற்சிகளையும் எடுத்து உள்ளார். மாணவியின் திறமைகளை பயிற்சியாளர் தான் வெளிக்கொண்டு வந்து போட்டியின் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து மாணவியின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளார். எனவே, முதலில் பயிற்சியாளருக்கு எனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவியின் பெற்றோரிடம் பேசியபோது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு மாணவி வெற்றிக்கு பாடுபட்டு உள்ளனர். இதுபோன்று மற்ற பெற்றோர்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளின் திறமைகளை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வரவேண்டும். மாணவி ஜனனிகாவின் வெற்றி காரைக்கால் மாவட்ட விளையாட்டு மட்டுமின்றி புதுச்சேரி அளவிலான மிகப்பெரிய சாதனையாகும். இது வெற்றிப்பயணம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து தொடங்கி உள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் ஜனனிகாவின் வெற்றியை மாதிரியாக எடுத்துக்கொண்டு மற்ற மாணவ மாணவிகளின் திறமைகளை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்தி விளையாட்டு துறையில் சாதனை படைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவி ஜனனிகாவுடன் மாவட்ட நிர்வாகம் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.மாணவியின் கோரிக்கைகளான அசோசியேஷன் அமைப்பது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் புதுச்சேரி முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் கூறினார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.