இந்தியா

உண்மையான உழைப்பு கொச்சைப்படுத்தப்படுகிறது: சி.ஐ.டி.யு புதுச்சேரி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிரபுராஜ்

Published

on

உண்மையான உழைப்பு கொச்சைப்படுத்தப்படுகிறது: சி.ஐ.டி.யு புதுச்சேரி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிரபுராஜ்

நா.பிரபுராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1997 முதல் 28 ஆண்டுகளாக எனது நண்பர் ஸ்டாலின் அபிமன்யு மூலம் இந்திய மாணவர் சங்கம், மார்க்சிய பொதுவுடமை கொள்கையால் ஈர்க்கப்பட்டு மாணவர் அமைப்பு , வாலிபர் அமைப்பு , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றி வந்தேன். தற்போது, இந்திய தொழிற்சங்க மையத்தின் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறேன். கடந்த சில மாதங்களாக , ஒரு சில நபர்களால் எனக்கு அமைப்பிற்குள் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் மன அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. எனது சமூகப் பணியை திறம்பட செய்வதற்கு தொடர்ந்து தடையை ஏற்படுத்தும் வண்ணம் ஒரு சிலர் கூட்டாக சேர்ந்து எனக்கு எதிராக கட்சிக்குள் தவறான பிம்பத்தை ஏற்படுத்துவதையும் கட்சியில் இருந்து என்னை ஓரம் கட்டுவதையும், கட்சியில் வேண்டியவர்களுக்காக ஒருதலை பட்சமாக சில முடிவுகளை எடுப்பதையும், சென்ற மாதம் நடைபெற்ற சி.ஐ.டி.யு மாநில மாநாட்டின் பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஜனநாயக முடிவை கட்சி ஏற்றுக்கொள்வதற்கு மாறாக மாநாட்டின் ஜனநாயகத்தை சிறுமைப்படுத்துவதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த அமைப்பிற்குள் எனது நேர்மையான ,உண்மையான உழைப்பினை சிறுமைப்படுத்தும் இந்த நடவடிக்கையை  ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே, சி.ஐ.டி.யு மாநில தலைவர் பொறுப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைக் கட்சி உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை நான் விடுவித்துக் கொள்கிறேன். நல்ல அமைப்பு,  நல்ல கட்சி ஒரு சில தனி நபர்களால் புதுச்சேரியில் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து மன வருத்தத்துடன்‌ நான் இந்த இயக்கத்தில் இருந்து வெளியேறுகிறேன். ஆனால், எனது சமூகப்பணி பழக்கம் போல் தொடரும். இந்த இயக்கம் கற்றுக் கொடுத்த அனுபவம், நேர்மையான அணுகுமுறையை புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து களத்தில் நிற்பேன். மிகப்பெரும் கனவுகளோடு இந்த இயக்கத்தில் பயணித்த நான், எண்ணற்ற தாக்குதல்கள், வழக்குகள், போராட்ட வடுக்களோடு  வெளியேறுகிறேன். சமூகப் புரிதலையும் , எனக்கான அடையாளத்தையும் இந்த அமைப்புதான் கொடுத்தது. ஆனால் , எனது நேர்மையான, உண்மையான உழைப்பை கொச்சைப்படுத்தும் ஒரு சில நபர்களால் நான் வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version