இந்தியா
உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டால் ரூ. 10,000 அபராதம்: புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டால் ரூ. 10,000 அபராதம்: புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
புதுச்சேரியில் உரிமம் (License) பெறாமல் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:”புதுச்சேரியில் பல பகுதிகளில் பொதுமக்கள் சிலர், உரிமம் எதுவும் பெறாமல் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் தனியார் சேவை வாகனங்களை வாடகைக்கு விடுவதாகப் போக்குவரத்துத் துறைக்குப் புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, புதுவைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மையமாக வைத்து நடத்தப்படும் இத்தகைய நடவடிக்கைகள், மோட்டார் வாகனச் சட்ட விதிகளுக்கு முரணானவை ஆகும்.வாடகை வாகன அமைப்பைப் பற்றி அறியாத நபர்களும், ஓட்டுநர் உரிமம் (Driving License) இல்லாதவர்களும் இந்த வாகனங்களை இயக்கும்போது விபத்து ஏற்பட்டால், காப்பீட்டுத் தொகை (Insurance) மற்றும் அரசின் இலவச மருத்துவ சேவை ஆகியவற்றைப் பெற முடியாமல் போகும். இது விபத்தில் சிக்கும் ஓட்டுநருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தும். எனவே, இருசக்கர வாகனங்களை உரிய உரிமம் இல்லாமல் வாடகைக்கு விடுவது மோட்டார் வாகனச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவோர் கண்டிப்பாகப் போக்குவரத்துத் துறையில் உரிமம் பெற வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 5 இருசக்கர வாகனங்கள் வைத்திருக்க வேண்டும். உரிமம் பெறாமல் விதிகளை மீறுவோர் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும்” என்றும் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரித்துள்ளார்.