தொழில்நுட்பம்

பூமிக்கு அருகே தூங்கும் பிளாக்ஹோல்: ஆபத்தை ஏற்படுத்துமா? அதிவேக ஜெட்-ல போனாலும் 4,000 கோடி ஆண்டுகளாகும்!

Published

on

பூமிக்கு அருகே தூங்கும் பிளாக்ஹோல்: ஆபத்தை ஏற்படுத்துமா? அதிவேக ஜெட்-ல போனாலும் 4,000 கோடி ஆண்டுகளாகும்!

நமது பிரபஞ்சத்தில் உண்மையான ‘அரக்கர்கள்’ உண்டு என்றால், அது பிளாக்ஹோல் (Black hole) ஆகத்தான் இருக்க முடியும். கற்பனை செய்ய முடியாத சக்தி கொண்ட இந்த பிரபஞ்சப் பகாசுரர்கள், தங்களுக்கு அருகில் வரும் எதையும் கோள்கள், நட்சத்திரங்கள், ஏன் சக பிளாக்ஹோலை கூட ஈவு இரக்கமின்றி தின்று தீர்க்கும். நமது பால்வெளி மண்டலம் (Milky Way) உட்பட ஒவ்வொரு பெரிய கேலக்ஸியின் மையத்திலும் ‘சூப்பர் மாசிவ்’ பிளாக்ஹோல் அமர்ந்திருக்கிறது. இதையெல்லாம் கேட்கும்போது நமக்குச் சற்று பயமாக இருக்கலாம். பூமிக்கு ஏதேனும் ஆபத்து உண்டா? நமது சூரியக் குடும்பத்தையும் ஒரு பிளாக்ஹோல் விழுங்கிவிடுமா?பூமிக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாக்ஹோல் பெயர் ‘கையா BH1’. இது “பக்கத்தில்” என்று சொன்னாலும், சுமார் 1,560 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. ஒரு ஒளியாண்டு என்பது ஒளி 1 வருடத்தில் பயணிக்கும் தூரம் (சுமார் 9.5 டிரில்லியன் கி.மீ). நம்மிடம் உள்ள அதிவேக விண்கலம் அங்கே போய்ச் சேர சுமார் 4,000 கோடி ஆண்டுகள் ஆகும். நாம் இவற்றைக் கண்டுபிடித்ததற்காக மிக மகிழ்ச்சியடைய வேண்டும், அவற்றை நாம் ஒரு நண்பனாகக் கூடக் கருதலாம் என்கிறார் பார்சிலோனா பல்கலைக்கழக வானியற்பியலாளர் சாரா ரஸ்டெல்லோ.பிளாக்ஹோல்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். காரணம், அவை ஒளியைக்கூட தப்பிக்க விடாது, அதனால் அவை கண்ணுக்குத் தெரியாதவை. பொதுவாக, ஒரு பிளாக்ஹோல் எதையாவது ‘சாப்பிடும்போது’ (நட்சத்திரங்களையோ வாயுக்களையோ உள்ளே இழுக்கும்போது), அதைச் சுற்றி ஒரு பிரகாசமான ‘திரள் வட்டு’ (Accretion Disc) உருவாகும். அதை வைத்து பிளாக்ஹோல் இருப்பதைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால், ‘கையா BH1’ ஒரு ‘செயலற்ற’ (Dormant) பிளாக்ஹோல். அதாவது, அது தற்போது எதையும் சாப்பிடாமல், அமைதியாக ‘தூங்கிக் கொண்டிருக்கிறது’.பின் எப்படி இதைக் கண்டுபிடித்தார்கள்?ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ‘கையா’ (Gaia) செயற்கைக்கோள் (2014-2025 வரை செயல்பட்டது), நட்சத்திரங்களின் அசைவுகளைக் கண்காணித்தது. அப்போது, நமது சூரியனின் அளவைக் கொண்ட ஒரு நட்சத்திரம், விண்வெளியில் விசித்திரமாக, தள்ளாடியபடி (warbling) சுற்றுவதைக் கவனித்தது. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று, அந்த நட்சத்திரத்தைத் தனது ஈர்ப்பு விசையால் ஆட்டுவிப்பது தெரிந்தது. இது நாம் கண்ணுக்குத் தெரியாத ஒன்றைக் கண்டுபிடிப்பது போல என்கிறார் ரஸ்டெல்லோ. அந்த கண்ணுக்குத் தெரியாத சக்திதான் ‘கையா BH1’.தற்போது, அந்த நட்சத்திரம் பிளாக்ஹோலிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தில்தான் சுற்றி வருகிறது (185 நாட்களுக்கு ஒருமுறை). ஆனால், இன்னும் சில பில்லியன் ஆண்டுகளில், அந்த நட்சத்திரம் ஒரு ‘சிவப்பு அரக்கனாக’ (Red Giant) வீங்கும்போது, அதன் பகுதிகளை பிளாக்ஹோல் சாப்பிடத் தொடங்கும். அப்போது, இந்த ‘தூங்கும்’ பிளாக்ஹோல் மீண்டும் ‘செயல்பாட்டுக்கு’ (Active) வரும்.’கையா’ செயற்கைக்கோள், BH2 (3,800 ஒளியாண்டுகள்) மற்றும் BH3 (1,900 ஒளியாண்டுகள்) என மேலும் 2 ‘தூங்கும்’ பிளாக்ஹோல்களைக் கண்டுபிடித்துள்ளது. இதில் ‘கையா BH3’ நமது சூரியனை விட 33 மடங்கு பெரியது. ஆனால், இவையெல்லாம் ‘நட்சத்திர வகை’ (Stellar) பிளாக் ஹோல்கள் மட்டுமே. இவை ஒரு பெரிய நட்சத்திரத்தின் மரணத்திற்குப் பின் உருவானவை. உண்மையான அரக்கர்கள், ‘சூப்பர்மாசிவ்’ (Supermassive) பிளாக்ஹோல்கள்.நமது பால்வெளி மண்டலத்தின் மையத்தில் இருக்கும் ‘சூப்பர்மாசிவ்’ பிளாக்ஹோலின் பெயர் ‘சஜிடேரியஸ் A’ இது நம்மிடமிருந்து 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் எடை, சுமார் 43 லட்சம் சூரியன்களுக்கு சமம். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய பிளாக்ஹோல் ‘TON 618’. இது நம்மிலிருந்து 1,000 கோடி ஒளியாண்டுகளுக்கும் அதிகமான தூரத்தில் இருக்கிறது. இதன் எடையைக் கேட்டால் தலை சுற்றும்… சுமார் 6,000 கோடி (60 பில்லியன்) சூரியன்களின் நிறைக்குச் சமம்! இது ‘சஜிடேரியஸ் A*’-ஐ விட பல்லாயிரம் மடங்கு பெரியது.TON 618 போன்ற ‘சூப்பர்மாசிவ்’ பிளாக்ஹோல்கள் எப்போதும் ‘செயல்பாட்டில்’ இருப்பவை. அவை தொடர்ந்து எதையாவது விழுங்கிக் கொண்டே இருப்பதால், அவற்றின் பிரகாசமான திரள் வட்டை வைத்து நம்மால் தொலைநோக்கிகள் மூலம் பார்க்க முடிகிறது. நல்ல வேளையாக, இவை அனைத்தும் நம்மை விட்டு மிக மிகத் தொலைவில் உள்ளன. பூமிக்கு அருகாமையில் உள்ள ‘கையா BH1’ தூங்கிக் கொண்டிருக்கிறது.எனவே, பிளாக்ஹோல்கள் நமக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, விஞ்ஞானி ரஸ்டெல்லோ சொல்வது போல, “அவை உண்மையில் மிகவும் வசீகரிக்கும் பொருள்கள். அவற்றைப் படிப்பதன் மூலம், நட்சத்திரங்கள், கேலக்ஸிகள், ஏன் இந்த பிரபஞ்சமே எப்படி உருவானது என்பதைப் பற்றி நாம் பிரம்மிப்பூட்டும் அளவு கற்றுக்கொள்கிறோம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version