பொழுதுபோக்கு
ராஜா ராஜா தான், ஆனா இது தேவா பாட்டு; என் ஏக்கத்தை தணித்த வார்த்தை: தேவா நெகிழ்ச்சி!
ராஜா ராஜா தான், ஆனா இது தேவா பாட்டு; என் ஏக்கத்தை தணித்த வார்த்தை: தேவா நெகிழ்ச்சி!
1986-ம் ஆண்டு வெளியான ‘மாட்டுக்கார மன்னாரு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. தொடர்ந்து 1989-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான ’மனசுக்கேத்த மகராசா’ படத்தின் மூலம் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வளர்ந்தார். அடுத்து தனது 3-வது படமாக ’வைகாசி பொறந்தாச்சு’ படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்றைக்கும் இளைஞர்களை துள்ளி விளையாட வைக்கும் அளவுக்கு பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த தேவாவை ‘தேனிசை தென்றல்’ என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். சென்னை மொழியில் பாடல்கள் எழுத தேவாவை தவிர வேறு யாராலும் முடியாது. சென்னை மொழி பாடல்களை மிகவும் அழகாக பாடக் கூடியவர் தேவா.ரஜினிக்கு அண்ணாமலை, பாட்ஷா, சரத்குமாருக்கு சூரியன், வேடன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ள தேவா, இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் பாடகராகவும் முத்திரை பதித்துள்ளார். இவரது கானா பாடல்களுக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. பல படங்களில் தேவா இசையமைப்பாளராகவே நடித்துள்ளார். இப்படி பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் தேவாவின் பாடல்கள் சிலவற்றுக்கு இன்று வரையிலும் இளையராஜா தான் இசையமைத்துள்ளார் என்று நாம் நினைத்துள்ளோம். அதாவது, தேவா இசையமைத்த ஒரு சில பாடல்களை இளையராஜா இசையமைத்ததாக தவறாக புரிந்து கொண்டுள்ளோம். இதுகுறித்து நேர்காணலில் பேசிய தேவா, “லப்பர் பந்து படத்தில் பேருந்தில் அனைவரும் போய்க் கொண்டிருக்கும் காட்சி வரும் அப்போது ‘ராசி தான் கை ராசி தான்’ என்ற பாடல் ஓடும். அப்போது பேருந்தில் இருக்கும் ஒருவர் ’ராஜா ராஜா தான்’ என்பார். அதற்கு பின் இருக்கையில் இருப்பவர் இது தேவா பாட்டு என்பார். எனக்கு ரொம்ப நாட்களாக இருந்த ஏக்கம் அந்த டயலாக் கேட்டதும் போய்விட்டது. தொலைக்காட்சியில் ஒரு சில பாடல்களில் என் பெயருக்கு பதிலாக இளையராஜா இசையமைத்தார் என்று வரும். அப்போது பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். உங்க பெயருக்கு பதிலாக இளையராஜா பெயர் வருகிறதே என்று. சில நேரத்தில் இளையராஜா பாட்டிற்கு இசை தேவா என்று போடுவார்கள். இப்படி தவறுகள் நடக்கும். ’லப்பர் பந்து’ படத்தில் அந்த டயலாக் வந்ததும் நான் பெரிய பெருமூச்சுவிட்டேன். ரொம்ப வருடங்களாக 35, 36 வருடங்களாக அடக்கி வைத்திருந்த ஒரு விஷயம் ஓபனாகிவிட்டதே என்று தோன்றியது” என்றார்.