இலங்கை
கனடாவில் வேலை வாய்ப்பு என மோசடி ; ஒரே நாளில் நான்கு அதிகாரிகள் கைது
கனடாவில் வேலை வாய்ப்பு என மோசடி ; ஒரே நாளில் நான்கு அதிகாரிகள் கைது
கனடாவில் தாதியர் சேவை வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, எட்டுப் பேரிடம் இருந்து ஒரு கோடியே இருபத்தெட்டு இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை பணியகத்தின் விசாரணை அதிகாரிகள் நேற்று மஹரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் YR Immigration என்ற பெயரில் கம்பஹா வோட் சிட்டி பிரதேசத்தில் சர்வதேச ஆலோசனையகம் ஒன்றை நடத்தி வந்துள்ளதுடன், அதன் மூலம் ஆலோசனை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இளைஞர் யுவதிகளை இணைத்து வந்துள்ளார்.
பணியகத்தின் செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காகப் பணம் பெற்றமை என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (29) கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 20 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் நேற்று கொட்டாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் தொழிற் பயிற்சி ஆலோசகராகப் பணியாற்றி வந்துள்ளதுடன், அந்த நிறுவனத்திற்கு வரும் இளைஞர் யுவதிகளை ஏமாற்றி, உடனடியாக இஸ்ரேலுக்கு அனுப்ப முடியும் என்று கூறி பணம் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்த சந்தேக நபருக்கு எதிராக மேலும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று ஹோமகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், (28) ஒரே நாளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட நால்வரை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.