பொழுதுபோக்கு

நான் என்றுமே விஜய்க்கு எதிரானவன் அல்ல, அவருக்கு நல்லதே நடக்கும்; சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த அஜித்!

Published

on

நான் என்றுமே விஜய்க்கு எதிரானவன் அல்ல, அவருக்கு நல்லதே நடக்கும்; சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த அஜித்!

நடிகரும், விளையாட்டு வீரருமான அஜித்குமார் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கரூர் சம்பவம் குறித்து பேசிய தகவல் பெரிய கவனம் ஈர்த்தது. இதில் சம்பவத்திற்கு விஜய் காரணம் அல்ல என்று அஜித் கூறியதாக ஒரு சாராரும், அவர் விஜய்க்கு எதிராக கருத்தை தான் சொன்னார் என்று ஒரு சாராரும் கூறிய நிலையில், இது குறித்து அஜித்தே தற்போது விளக்கம் அளித்துள்ளார்.  சாணக்யா சேனலுக்கு அளித்துள்ள செய்திக் குறிப்பில் பல விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோவில் அஜித் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதில், ஆங்கில ஊடகத்திற்கு நான் அளித்த பேட்டி, இளைஞர்களிடத்தில் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக, பலரும் அவரவர் அஜெண்டாவுக்கு ஏற்ற வகையில், பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு எதையெடுத்தாலும் பரபரப்பாக்க முயல்வார்கள் என்று எனக்குத் தெரியும். எனக்கு பிடித்த பாதையில் ரொம்பவும் பாசிடிவான எண்ணத்துடனே பயணிக்கிறேன். ஒரு காலத்தில் சினிமா பத்திரிகையாளர், விளையாட்டு பத்திரிகையாளர், அரசியல் பத்திரிகையாளர்கள் என பலரும் இருந்தனர். ஆனால் இன்றைக்கு அரசியல் பத்திரிகையாளர்களை விட ஒரு சில சினிமா பத்திரிகையாளர்களே அரசியல் மயமாகி உள்ளார்கள். என்னுடைய நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. மாறாக அவர்கள் அதை, அஜித்தும் விஜய்க்கும் இடையிலான மோதல், அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையிலான போர் என்பது போல மாற்றிவிட்டார்கள். நாம் நச்சு கலந்த சமூகமாக மாறி விட்டோம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், ஆங்கில ஊடகத்திற்கான எனது பேட்டி 10, 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய பேசு பொருளாக மாறி இருக்கும். உங்களையும் உங்கள் குடும்பங்களையும் முதலில் பாருங்கள். பார்ப்பதற்கு தகுதியானது என்று நினைத்தால் என் படத்தை வந்து பாருங்கள். படத்தை பாருங்கள் என்று வற்புத்த மாட்டேன். ஓட்டு கேட்டும் வரமாட்டேன். நான் எப்போது எல்லாம் ரேஸ் காரில் அமர்கிறேனோ, உயிர் போவதற்கு ஒரு நொடி போதும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு உள்நோக்கமோ, திட்டமோ இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை மிகவும் எளிதில் உடையக் கூடியது. என்னால் முடிந்தவரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். கரூரில் நடந்தது துரதிஷ்டவசமானது. அது நீண்ட நாட்களாக நடக்கக் காத்திருந்தது. இதற்கு முன் ஆந்திரா சினிமா தியேட்டரிலும், பெங்களூரு கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெற்றுள்ளது. பல நாடுகளிலும் நடைபெற்றுள்ளது. நான் ஏற்கனவே சொன்னது போல பொது வெளியில் எப்படி நடக்க வேண்டும் என்பது நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும். எனது இந்த கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்படாது என்று நம்புகிறேன். ஒரு சில ஊடகங்கள் ரசிகர்கள் மீது பழி சுமத்துகிறார்கள். எனது தந்தையின் மறைவின் போது அவரது பூத உடலை படம்பிடிக்க சில ஊடகத்தினர் அவர்களது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அந்த ஒரு சில ஊடகத்தினர் ரசிகர்களை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல நானும் குற்றத்திற்கு பொறுப்பானவன் தான். என்னிடத்திலும் தவறுகள் உள்ளன. நாம் அனைவரும் எது சரி என்று பார்த்து அதைப் பின்பற்ற வேண்டும். வாக்களிப்பதை எனது ஜனநாயக கடமையாக பார்க்கிறேன். தமிழ்நாடு தொடங்கி உலகம் முழுவதும் அரசுகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்ததாக இருக்க வேண்டும். சில சமூகங்கள் சுரண்டப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றன. அதுபோல மக்கள் பிரச்னைகளுக்கு அரசியல் கட்சிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் உள்ளனர். ஆனால், உள்நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதாக சில போலி சமூக ஆர்வலர்கள் உள்ளனர். அது போன்ற போலிகளால், மக்கள் மூளைச் சலவை ஆகாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். அதேபோல எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க நினைக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன். வாழ்த்தியிருக்கிறேன். எல்லோருமே அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்தியுள்ளேன். இதற்கிடையில், எனது பூர்வீகம் அடிக்கடி கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. சிலர் எப்போதுமே என்னை வேற்றுமொழிக்காரன் என்றே கூறி வருகிறார்கள். ஒரு நாள் வரும் அன்று இதே நபர்கள் உரத்த குரலில் என்னைத் தமிழன் என்று அழைப்பார்கள். இந்த கார் ரேஸில் சாதித்து இந்த மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என்று நம்புகிறேன். என் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த பணியில் எனது உயிரே போனாலும் பரவாயில்லை. தமிழ்நாடே விழித்துக் கொள், இந்தியாவே விழித்துக் கொள். அன்புடன் அஜித்” என்று குறிப்பிட்டுள்ளதாக பாண்டே கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version