இலங்கை
கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை ; குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்
கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை ; குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்
கனடாவின் ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த 20 வயது இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன், தனுஷ்க விக்ரமசிங்க என்பவரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டையும் சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் தாய், 04 பிள்ளைகள் மற்றும் அவர்களின் நண்பர் உள்ளிட்ட 06 பேர் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி குத்தி கொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஒட்டாவா நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தம்மீது சுமத்தப்பட்ட 06 குற்றச்சாட்டுக்களில், 04 குற்றச்சாட்டுக்களை இலங்கையரான சந்தேக நபர் டி சொய்சா ஏற்றுக் கொண்டுள்ளார்.
கொலை சம்பவம் நடத்தப்பட்ட போது, டி சொய்சா 19 வயதான சர்வதேச மாணவராக இருந்தார்.
அவர் ஒட்டாவாவின் பர்ஹேவன் புறநகர்ப் பகுதியில் வசித்த விக்ரமசிங்க குடும்பத்தினருடன் அவர்களின் வீட்டின் அடித்தளத்தில் வசித்து வந்தார்.
நண்பர் என்ற ரீதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக, இலங்கை மாணவரான சொய்ஷா , விக்ரமசிங்கவின் குடும்பத்துடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொலை இடம்பெற்ற தினத்திலேயே சந்தேகநபரான சொய்ஷா கைது செய்யப்பட்டார்.
மாணவர் விசா காலம் நிறைவடைந்த நிலையில் கனடாவில் தங்கியிருந்த சொய்ஷா, தன்னிடம் பணம் இல்லாது போனமையால் கொலையை செய்ய எத்தணித்ததாக ஆரம்பத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
கொலையை நடத்துவதற்கு 05 நாட்களுக்கு முன்னரே தாம் திட்டத்தை வகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை கொண்டு, ஏற்கனவே தற்கொலை முயற்சியிலும் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எவ்வித கற்றல் செயற்பாடுகளும், தொழிலும் இன்றி இருந்த சந்தேகநபர் மெய்நிகர் காணொளி விளையாட்டுக்களில் தமது நேரத்தை செலவிட்டார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கை விசாரணை செய்த ஒட்டாவா நீதிமன்றத்தின் நீதிபதி கெவின் பிலிப்ஸ், “இந்த வழக்கில் வன்முறையின் அளவு திகைப்பூட்டும், கொடூரமான பேய்த்தனமானதாக காணப்படுவதாக”நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
எனினும், விசாரணை முழுவதும் டி சொய்சா அமைதியாக அமர்ந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதி ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டபோது, தான் செய்ததற்கு மிகவும் வருந்துவதாகவும், “நான் செய்ததன் உண்மையை ஒப்புக்கொள்வதில் வாழ்நாள் முழுவதும் செலவிடுவேன்” என்றும் குற்றவாளியான டி.சொய்ஷா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், ஒரு சமூகத்தை பதறவைக்கும் வகையில் கொலை நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை சீர்குழைத்து, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் நீதிமன்றத்தின் கூட்டுத் தீர்மானங்களுக்கு தாம் இணங்குவதாக தெரிவித்த நீதிபதி பிலிப்ஸ் வழக்கை நிறைவுறுத்தியுள்ளார்.
கொலைக் குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளமையால் சந்தேகநபருக்கு, பிணையற்ற வகையில் குறைந்தபட்சம் 25 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.