இலங்கை
ஜனாதிபதி அநுரவின் 2026 வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
ஜனாதிபதி அநுரவின் 2026 வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (7) பிற்பகல் சமர்ப்பிக்கவுள்ள 2026 வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் வரவு செலவுத் திட்ட உரையை இன்று பிற்பகல் 01.30 மணிக்கு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
அதற்கிணங்க, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதம் நாளை (08) முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.
வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் இடம்பெற்ற பின்னர், வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து மற்றைய ஒவ்வொரு நாளும் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவு ரூபா 4,434 பில்லியன் ஆகும்.
எதிர்வரும் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது நிதி அமைச்சுக்கு ஆகும், அதன் பெறுமானம் ரூபா 634 பில்லியன் ஆகும்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்காக ரூபா 618 பில்லியனும், அரச நிர்வாக அமைச்சுக்காக ரூபா 596 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூபா 554 பில்லியனாகவும், பாதுகாப்பு அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூபா 455 பில்லியனாகவும் உள்ளது.
கல்வி அமைச்சுக்காக ரூபா 301 பில்லியனும், ஜனாதிபதியின் செலவுத் தலைப்பிற்காக ரூபா 11 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் செலவுத் தலைப்பிற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 2.7 பில்லியனை விட சுமார் 8 பில்லியன் ரூபா அதிகமாகும்.
பிரதானமாக அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2026 ஆம் ஆண்டில் ரூபா 8.29 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டமையே இவ்வாறு செலவுத் தலைப்பு அதிகரிப்பதற்குக் காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.
மேலும், 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஓய்வூதியங்களுக்காக ரூபா 488 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் , 2026 ஆம் ஆண்டுக்கான செலவுகளை ஈடுசெய்வதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெறக்கூடிய அதிகபட்ச கடன் எல்லையாக ரூபா 3,800 பில்லியன் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதனை மீறக்கூடாது என்றும் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.