தொழில்நுட்பம்
5,50,000 மடங்கு அழுத்தம்.. பூமியின் மையத்தில் இரும்புடன் பிணைந்திருக்கும் ஹீலியம்; வரலாற்றை மாற்றி எழுதும் ஆய்வு!
5,50,000 மடங்கு அழுத்தம்.. பூமியின் மையத்தில் இரும்புடன் பிணைந்திருக்கும் ஹீலியம்; வரலாற்றை மாற்றி எழுதும் ஆய்வு!
பலூன்களில் காற்றடித்து பயன்படுத்தப்படும் ஹீலியம், வேறு எந்தப் பொருளுடனும் அவ்வளவு எளிதில் வினைபுரியாது, அது ‘மந்த வாயு’ (Inert Gas) என்றுதானே நாம் படித்திருக்கிறோம்? ஆனால், அந்த அறிவியல் நம்பிக்கையை அடியோடு உடைத்தெறியும் ஆச்சரியமான உண்மையை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். பூமியின் கொதிக்கும் மையத்தில், கற்பனைக்கு எட்டாத கொடூரமான அழுத்தம், வெப்பத்தின் கீழ், ஹீலியம் அணுக்கள் இரும்புடன் (Iron) ரகசியமாக ‘நட்பு’ பாராட்டி, வலுவான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒற்றை கண்டுபிடிப்பு, நமது பூமி எப்படி உருவானது என்பது பற்றிய நமது மொத்த புரிதலையும், பாடப்புத்தகங்களையும் மாற்றி எழுதக் கூடும்.பூமியின் மையத்தில் என்ன நடக்கிறது என்பதை சோதித்துப் பார்ப்பது எளிதல்ல. இதற்காக, ஜப்பான் மற்றும் தைவான் விஞ்ஞானிகள் குழு, ‘லேசர்-சூடாக்கப்பட்ட டயமண்ட் அன்வில் செல்’ என்ற மிக சக்திவாய்ந்த கருவியைப் பயன்படுத்தியது. என்ன செய்தார்கள்? இரும்பையும் ஹீலியத்தையும் ஒன்றாக வைத்து, வைரங்களுக்கு இடையில் நசுக்கினார்கள். எவ்வளவு அழுத்தம்? வளிமண்டல அழுத்தத்தை விட சுமார் 50,000 முதல் 550,000 மடங்கு அதிக அழுத்தம். சுமார் 1,000 முதல் 3,000 கெல்வின் (இது, கார்களின் ஸ்பார்க் பிளக்குகளில் உள்ள இரிடியம் உலோகத்தையே உருக்கிவிடும் வெப்பம்.முடிவு? ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சியடைந்தனர். அந்த தீவிர நிலையில், இரும்பின் படிக அமைப்புக்குள் ஹீலியம் அணுக்கள் புகுந்து, நிலையான சேர்மங்களை (Compounds) உருவாக்கின. இரும்பு மாதிரிகளில் சுமார் 3.3% ஹீலியம் இருந்தது – இது முந்தைய கணிப்புகளை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகம்.ஹவாய், ஐஸ்லாந்து போன்ற இடங்களில் உள்ள எரிமலைப் பாறைகளில், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய “ஆதிகால ஹீலியம்” எப்படி வந்தது என்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக இருந்தது. சாதாரண பலூன் காற்றைப்போல், ஹீலியம் எளிதாக விண்வெளியில் தப்பித்துவிடும். அப்படி இருக்க, பில்லியன் ஆண்டுகளாக அது எப்படி பூமியின் உள்ளே சிக்கியிருந்தது? ஹீலியம் தப்பித்துச் செல்லவில்லை, மாறாக, பூமியின் மையத்தில் இரும்புடன் வேதியியல் ரீதியாக பிணைக்கப்பட்டு ‘சிறைபிடிக்கப்பட்டிருந்தது’. எரிமலைகள் வெடிக்கும்போது, அந்த ஹீலியம் இப்போது மெல்ல மெல்ல வெளியேறுகிறது என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவானபோது, சூரிய மண்டல மேகத்திலிருந்து (Solar Nebula) பெருமளவு ஹீலியம், ஹைட்ரஜனை அது ஈர்த்திருக்கலாம். அப்படி ஈர்க்கப்பட்ட ஹைட்ரஜன்தான், பிற்காலத்தில் நமது பெருங்கடல்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் இப்போது நம்புகின்றனர். இந்த ஆய்வு பூமியைப் பற்றி மட்டுமல்ல; வியாழன், சனி போன்ற பிரம்மாண்ட வாயு கிரகங்களின் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும்.அடுத்து, பூமியின் மையத்தில் உள்ள நிக்கல், சிலிக்கான் போன்ற மற்ற தனிமங்களுடனும் ஹீலியம் இப்படி பிணைப்பை ஏற்படுத்துமா? சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திலும் இதேபோன்ற ஹீலியம் கருவூலங்கள் மறைந்திருக்கின்றனவா? போன்ற மில்லியன் டாலர் கேள்விகளுடன் விஞ்ஞானிகள் தங்கள் அடுத்தகட்ட ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளனர்.