தொழில்நுட்பம்
காம்பஸ் செயலிழக்கும் பூமியின் 5 விசித்திர இடங்கள்… அறிவியல் பின்னணி என்ன?
காம்பஸ் செயலிழக்கும் பூமியின் 5 விசித்திர இடங்கள்… அறிவியல் பின்னணி என்ன?
இன்று நாம் வழி தெரியவில்லை என்றால் உடனே ஜி.பி.எஸ் ஆன் செய்துவிடுகிறோம். ஆனால், இந்த ஜி.பி.எஸ். மற்றும் செயற்கைக்கோள்கள் வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, மாலுமிகளுக்கும், சாகசப் பயணிகளுக்கும் உயிர்காக்கும் நண்பனாக இருந்தது காம்பஸ் (Compass). பூமியின் காந்தப்புலத்திற்கு ஏற்ப தன்னை சரிசெய்து, அது காட்டும் ‘வடக்கு’ திசை, பலரின் பயணங்களை வழிநடத்தியது. ஆனால், பூமியிலேயே சில விசித்திரமான இடங்கள் உள்ளன; அங்கே சென்றால், இந்த நம்பகமான காம்பஸ் கூட வேலை செய்வதை நிறுத்திவிடும். அது இலக்கின்றி சுழலும், குழம்பிப்போகும், அல்லது முற்றிலும் தவறான திசையைக் காட்டும்.இது அந்த காம்பஸ் தவறல்ல. மாறாக, அந்த இடங்களில் இயற்கையாகவே நிலவும் அதீத நிலைமைகள்தான் காரணம். சில இடங்களில் பூமிக்கு அடியில் இருக்கும் பிரம்மாண்டமான இரும்புப் படிவுகள், சில இடங்களில் எரிமலைச் செயல்பாடுகள், அல்லது பூமியின் காந்தப்புலத்திலேயே ஏற்படும் விசித்திரமான மாற்றங்கள் (Magnetic Anomalies) தான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம். நவீன உலகில் ஜி.பி.எஸ் நம்பியிருந்தாலும், இந்தக் காம்பஸ் ஏன் குழம்புகின்றன என்பதைப் புரிந்துகொள்வது, நமது பூமிக்கு அடியில் நடக்கும் மர்மமான உள் செயல்பாடுகளைப் பற்றி நமக்குச் சொல்கிறது. அப்படிப்பட்ட 5 மர்ம இடங்கள் பற்றி இங்கே காண்போம்.1. காந்த துருவங்கள் (Magnetic Poles)கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் உள்ள ‘காந்த வட துருவம்’ (Magnetic North Pole).என்ன நடக்கிறது: இங்குதான் மர்மம் தொடங்குகிறது. பொதுவாக காம்பஸ், பூமியின் காந்தப்புலம் கிடைமட்டமாகப் பாய்வதை வைத்து வடக்கு திசையை காட்டும். ஆனால், இந்தத் துருவப் பகுதிகளில், காந்த விசை அப்படிப் பாய்வதற்குப் பதிலாக, செங்குத்தாக நேராக பூமிக்குள் பாய்கிறது. இதனால் காந்த ஊசியால் வடக்கைக் காட்ட முடியாமல், என்ன செய்வதென்று தெரியாமல், குழப்பத்தில் இலக்கின்றிச் சுழலத் தொடங்குகிறது. இங்கு செல்லும் ஆய்வாளர்கள் காம்பஸ்-ஐ நம்புவதே இல்லை.2. குர்ஸ்க், ரஷ்யா (Kursk, Russia)எங்கே: மேற்கு ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதி.என்ன நடக்கிறது: உலகின் மிக சக்திவாய்ந்த காந்தப் புதிர்களில் இதுவும் ஒன்று. இந்தப் பகுதிக்கு அடியில், பூமிக்குள் பில்லியன் கணக்கான டன் இரும்புத் தாது ஒரு பிரம்மாண்டமான மலையைப் போலப் புதைந்து கிடக்கிறது. இந்த மாபெரும் இரும்புக் குவியல், பூமியின் இயற்கையான காந்தப்புலத்தையே ஆதிக்கம் செலுத்துகிறது. இது காம்பஸின் முள்ளை தன் பக்கம் ஈர்த்து, திசையைக் குழப்பி, தவறான வழியை காட்டுகிறது.3. கெர்குலன் பீடபூமி (Kerguelen Plateau)எங்கே: தெற்கு இந்தியப் பெருங்கடலில், ஆழ்கடலுக்கு அடியில்.என்ன நடக்கிறது: இது நீருக்கடியில் இருக்கும் ஒரு பிரம்மாண்டமான எரிமலைப் பகுதி. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்துச் சிதறிய எரிமலைக் குழம்புப் பாறைகள் இங்கு நிறைந்துள்ளன. இந்தப் பாறைகளின் காந்தத் தன்மை, அப்பகுதியில் செல்லும் கப்பல்களின் காம்பஸ் சில சமயங்களில் ஒழுங்கற்ற மாறுபாடுகளை காட்டுவதாக கடல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிரந்தர பிரச்னையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றாலும், விஞ்ஞானிகளுக்கு இது புதிரான இடமாகவே உள்ளது.4. வோஸ்டாக் ஏரி (Lake Vostok, Antarctica)எங்கே: அண்டார்டிகாவின் பல கிலோமீட்டர் பனிப்பாறைகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் ஏரி.என்ன நடக்கிறது: இந்த ஏரியின் தென்கிழக்குக் கரையில், பனிக்கு அடியில், சுமார் 1,000 நானோடெஸ்லா அளவிலான மிக வலுவான காந்த ஒழுங்கின்மை கண்டறியப்பட்டுள்ளது (இது சாதாரண அளவை விட மிக அதிகம்!). பூமிக்கு அடியில் இங்கு ஓடு (Crust) மெலிந்து போயிருக்கலாம் அல்லது காந்தப் பாறைகள் குவிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்தத் தீவிரமான உறைபனிச் சூழலில் காந்த ஊசியை வைத்து நேரடியாகச் சோதிக்க முடியவில்லை என்றாலும், இவ்வளவு வலுவான காந்தப்புலம், நிச்சயம் அங்கே காந்த ஊசியின் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்கி விடும் என விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.5. ஹட்சன் விரிகுடா (Hudson Bay, Canada)எங்கே: கனடாவில் உள்ள ஹட்சன் விரிகுடாப் பகுதி.என்ன நடக்கிறது: இந்தப் பகுதி காந்த வட துருவத்திற்கு மிக அருகில் இருப்பதால், இங்கு பூமியின் காந்த விசை கிடைமட்டமாக (horizontal) மிகவும் பலவீனமாக உள்ளது. இந்த பலவீனமான விசையால், காம்பஸ் எளிதில் குழப்பமடைந்து, காந்தபுயல்களால் பாதிக்கப்பட்டு, நம்பகத்தன்மையற்ற அளவீடுகளைக் கொடுக்கின்றன. இதனால்தான், ‘நேச்சர்’ (Nature) இதழே, இப்பகுதியில் கப்பலில் செல்லும்போது பாரம்பரிய காந்த ஊசிகளுக்குப் பதிலாக, ‘கைரோ காம்பஸ்’ (Gyro Compass) பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறது.