தொழில்நுட்பம்
உலகின் மிகப் பழமையான காற்று கண்டுபிடிப்பு… அண்டார்டிகா பனி சொல்லும் ஆச்சரிய பதில்!
உலகின் மிகப் பழமையான காற்று கண்டுபிடிப்பு… அண்டார்டிகா பனி சொல்லும் ஆச்சரிய பதில்!
5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் காற்று எப்படி இருந்தது? அதில் கார்பன்-டை-ஆக்சைடு எவ்வளவு இருந்தது? மனித இனம் தோன்றுவதற்கு முன்பிருந்த அந்த உலகம் எவ்வளவு வெப்பமாக இருந்தது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை மறைமுகமான சான்றுகள் மூலமே பதிலளித்து வந்தோம். ஆனால் இப்போது, வரலாற்றிலேயே முதல் முறையாக, 5 மில்லியன் (50 லட்சம்) ஆண்டுகள் பழமையான உண்மையான காற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்! ஆம், இது ‘டைம் கேப்சூல்’ கண்டுபிடிப்பைப் போன்றது. அண்டார்டிகாவின் உறை பனியில், சின்னஞ்சிறு குமிழ்களாக இந்த பழங்காலக் காற்று சிக்கியிருந்ததை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று மீட்டெடுத்துள்ளது.இந்த அரிய பொக்கிஷம் கிடைத்தது கிழக்கு அண்டார்டிகாவின் ஆலன் ஹில்ஸ் (Allan Hills) என்ற பகுதியில். இது ஒரு ‘மந்திரப் பிரதேசம்’ என்றே சொல்லலாம். ஏன்? பொதுவாக, பழங்காலப் பனியை அடைய பல கிலோமீட்டர் ஆழம் துளையிட வேண்டும். ஆனால் இந்த ஆலன் ஹில்ஸ் பகுதியில், பலத்த காற்றும், பனியாறுகளின் நகர்வும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புதைந்து கிடக்கும் பழங்காலப் பனி அடுக்குகளைத் தாமாகவே பூமிக்கு மேலே கொண்டு வந்து விடுகின்றன. இப்பகுதியை ‘நீலப் பனிப் பகுதி’ (Blue Ice Area) என்றழைக்கிறார்கள். இங்கு, ஆழமாகத் தோண்டாமலேயே, பழங்கால ரகசியங்களை நம்மால் எளிதாக அணுக முடிகிறது.பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் மற்றும் COLDEX (பழைமையான பனிக்கட்டி ஆய்வு மையம்) ஆராய்ச்சியாளர்கள், 100 முதல் 200 மீட்டர் ஆழத்தில் இருந்தே இந்தப் பனிக்கட்டித் துண்டுகளை வெட்டி எடுத்துள்ளனர். ஆர்கான் மற்றும் பொட்டாசியம் ஐசோடோப் முறைகள் மூலம் இதன் வயதை கணித்தபோது, அவர்கள் மிரண்டுபோனார்கள். காரணம், அதன் வயது 43 லட்சம் முதல் 51 லட்சம் (4.3 to 5.1 மில்லியன்) ஆண்டுகள் இதன் வயது.இந்த பனிக்கட்டிகளுக்குள் சிக்கியிருக்கும் சின்னஞ்சிறு காற்றுக் குமிழ்கள், வெறும் குமிழ்கள் அல்ல; அவை அந்தக் காலத்து வளிமண்டலத்தின் நேரடி மாதிரிகள் (Direct Samples). புதைபடிவங்கள், வண்டல் மண் போன்ற மற்ற மறைமுக சான்றுகளை விட, இந்தக் காற்று மாதிரிகள் மிகத் துல்லியமானவை. இவை, அந்த காலகட்டத்தில் கார்பன் டை ஆக்சைடு (CO₂) மற்றும் மீத்தேன் போன்ற வாயுக்கள் எவ்வளவு இருந்தன என்பதை நமக்கு நேரடியாகக் காட்டுகின்றன. இதற்கு முன், 2017-ல் இதே பகுதியில் கிடைத்த பனி சுமார் 27 லட்சம் ஆண்டுகள் பழமையானது. அதில் CO₂ அளவு 300 ppm குறைவாக இருந்தது தெரிந்தது. ஆனால் இப்போதோ, நாம் அதைவிட பன்மடங்கு பழமையான காலத்திற்கு சென்றுவிட்டோம்.இந்த கண்டுபிடிப்பு ஏன் முக்கியம்?இந்த 5 மில்லியன் ஆண்டு பழமையான காற்று, ‘ப்ளியோசீன்’ (Pliocene) சகாப்தத்தை சேர்ந்தது. அந்த காலத்தில் பூமி எப்படி இருந்தது தெரியுமா?இன்றைய அளவை விட பூமி 3°C முதல் 4°C வரை வெப்பமாக இருந்திருக்கிறது. துருவப் பனிக்கட்டிகள் உருகி, கடல் மட்டம் சுமார் 20 மீட்டர் (சுமார் 65 அடி) அதிகமாக இருந்திருக்கிறது. இப்போது, அந்த வெப்பமான உலகின் காற்றை நாம் நேரடியாக ஆய்வு செய்வதன் மூலம், “அப்போது CO₂ அளவு எவ்வளவு இருந்தது?” என்ற கேள்விக்குத் துல்லியமான விடை கிடைக்கும். இது, தற்போதைய காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை கணிக்கவும், நமது பழைய காலநிலை மாதிரிகளைச் சரிபார்க்கவும் விஞ்ஞானிகளுக்குப் பெரிதும் உதவும்.