பொழுதுபோக்கு
தமிழ் சினிமா முதல் சூப்பர் ஸ்டார்; தங்க தட்டில் சாப்பிட்ட நடிகர், ஒரு கொலை வழக்கால் திசை மாறிய வாழ்க்கை!
தமிழ் சினிமா முதல் சூப்பர் ஸ்டார்; தங்க தட்டில் சாப்பிட்ட நடிகர், ஒரு கொலை வழக்கால் திசை மாறிய வாழ்க்கை!
எழுத்தாளரும் இயக்குநருமான செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் மூலம் ஒரு பெயர் மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது. அந்த பெயர் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதிகம் அறிமுகம இல்லாத, மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் (எம்.கே.தியாகராஜபாகவதர்) என்பதாகும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:தியாகராஜ பாகவதர் ஒரு கர்நாடக சங்கீதப் பாடகர் மட்டுமே என்று பலர் கருதினாலும், அவரைப் பற்றி தேடினால், அவர் அதைவிடப் பல மடங்கு பெரியவர் என்பதை வெளிப்படுத்துகிறது. உண்மையில், அவர் தமிழ் திரையுலக வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்தார், மேலும் அவர் “தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. சுவாரஸ்யமாக, அவரது படங்களில் ஒன்றான ‘ஹரிதாஸ்’ (1944), ஒரு காலத்தில் முறியடிக்க முடியாத சாதனையாக, மெட்ராஸில் (இப்போது சென்னை) உள்ள பிராட்வே சினிமாவில் 114 வாரங்கள் (சுமார் 784 நாட்கள்) ஓடியது. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்திருந்த இந்தச் சாதனையை, 2005 ஆம் ஆண்டு வெளியான “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்தின் ‘சந்திரமுகி’ திரைப்படம் முறியடித்தது. அந்தப் படம் சென்னையில் உள்ள சாந்தி திரையரங்கில் சுமார் 890 நாட்கள் ஓடியதாகக் கூறப்படுகிறது.அவரைத் தொடர்ந்து, எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்), சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பல நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் தோன்றி வளர்ந்த பிறகும், அவரது மைல்கல்லைத் தகர்க்க கிட்டத்தட்ட 59 ஆண்டுகள் தேவைப்பட்டது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இது, அவரது குறுகிய மற்றும் சர்ச்சைக்குரிய முடிவுக்கு வந்த தொழில் வாழ்க்கைக்கு மத்தியிலும், அவர் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு வகையில், எம்.கே. தியாகராஜ பாகவதர் எம்.கே.டி. என்று அழைக்கப்பட்டவர். இந்திய சினிமாவின் ஆரம்ப ஆண்டுகளில் மிகவும் புகழ்பெற்ற அதே சமயம் மிகவும் அபகீர்த்தியான நட்சத்திரமாக இருந்தார் என்று கூறலாம். மேலும், சில தகவல்கள் மற்றும் வதந்திகள் உண்மையாக இருந்தால், துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படம் எம்.கே.டி-யின் வாழ்க்கையை மையமாகக் கொண்டோ அல்லது அவரது வாழ்ககையின் இன்ஸ்பிரேஷனாகவோ இருக்கலாம்.யார் இந்த எம்.கே. தியாகராஜ பாகவதர்?சினிமா வரலாற்றாசிரியர் ராண்டோர் கய் ‘தி இந்து’வில் எம்.கே.டி. பற்றி எழுதிய ஒரு கட்டுரையில், இந்த நடிகர்-பாடகர் 1910 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி திருச்சியில் ஏழ்மையான தட்டார் குடும்பத்தில் பிறந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். சிறு வயதிலேயே பாடுவதில் அசாத்திய திறமையைக் காட்டிய தியாகராஜன், உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதுவே அவர் நாடக உலகிற்குள் நுழைய வழி வகுத்தது. அவர் முறைப்படி கர்நாடக சங்கீதத்தைக் கற்று, தனது குருமார்களில் ஒருவரால் “பாகவதர்” என்ற பட்டத்தையும் பெற்றார்.அவரது மிகவும் பிரபலமான நாடகமான ‘பவளக்கொடி’ 1934 ஆம் ஆண்டு திரைப்படமாக மாற்றப்பட்டபோது, அவரை நடிக்க வைக்கத் தயாரிப்பாளர்கள் யோசிக்கவில்லை. எனவே, அவரும் அவரது புகழ்பெற்ற மேடைத் துணையான எஸ்.டி. சுப்புலட்சுமியும் தங்கள் திரைப்பட அறிமுகத்தைச் செய்தனர். சுமார் 50 பாடல்கள் இடம்பெற்ற ‘பவளக்கொடி’ ஒரு பரபரப்பான வெற்றியைப் பெற்றது. எம்.கே.டி. மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் ‘பவளக்கொடி’யின் இயக்குநர் கே. சுப்ரமணியத்துடன் மீண்டும் இணைந்து ‘நவீன சாரங்கதாரா’ (1936) என்ற படத்தைக் கொடுத்தனர். இந்த படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மிகப்பெரிய வெற்றிப் படங்களான ‘சிந்தாமணி’ (1937) முதல் ‘அம்பிகாபதி’ (1937), ‘திருநீலகண்டர்’ (1940), ‘அசோக்குமார்’ (1941), ‘சிவகவி’ (1943) வரை, எம்.கே.டி. தொட்டதெல்லாம் பொன்னானது. எம்.கே.டி-யின் எழுச்சி ஆச்சரியமானதாகவும் அதீத வெற்றியைக் கொடுத்ததாகவும் இருந்தபோது, அவரது வீழ்ச்சி இன்னும் அதிக அதிர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகவும் இருந்தது.லட்சுமிகாந்தன் கொலை வழக்குதனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது, எம்.கே.டி. அதிகப் பிரபலமான ஒரு கொலை வழக்கில் சிக்கி, பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே, லட்சுமிகாந்தன் வழக்கு சென்னையின் வரலாற்றில் ஒரு சர்ச்சைக்குரிய அத்தியாயமாகவே உள்ளது. ராண்டோர் கையால் “பெயர்போன மஞ்சள் பத்திரிகையாளர்” என்று வர்ணிக்கப்பட்ட சி.என். லட்சுமிகாந்தன், தனது பத்திரிகைகளான ‘சினிமா தூது’ மற்றும் ‘இந்து நேசன்’ ஆகியவற்றில் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பிற பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அடிக்கடி எழுதி வந்தார். எழுத்தாளர் ஜி.ஆர். இந்து கோபன் எழுதிய ‘மர்மர் இன் மெட்ராஸ்’ என்ற புத்தகத்தில் உள்ள ஒரு அத்தியாயத்தின்படி, தன்னைத்தானே பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்ட லட்சுமிகாந்தன், போலியான ஆவணங்கள் தொடர்பான மோசடி வழக்கில் சிக்கி, 1932 முதல் 1939 வரை அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு, அவர் நகரத்தின் செல்வந்தர்களைக் குறிவைக்கத் தொடங்கினார். அவர்களைப் பின்தொடர்வதன் மூலம் சேகரித்த அடிப்படைத் தகவல்களைப் பயன்படுத்தி, அவர் போலிக் கதைகளை உருவாக்கினார். பின்னர், அதே செல்வந்தர்களை மிரட்டி பணம் பறித்தார். பணக்காரர்களை பெண்களுடன் இணைக்கும் கதைகளுக்கு அப்போதே அதிக வரவேற்பு இருந்தது. நடிகைகள் மற்றும் திரையுலகில் உள்ள பிற முக்கியப் பிரமுகர்களின் வேண்டுகோளின் பேரில் அன்றைய மெட்ராஸ் கவர்னர் ஆர்தர் ஆஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப் ‘சினிமா தூது’வின் உரிமத்தை ரத்து செய்தபோதிலும், லட்சுமிகாந்தன் பதிலடி கொடுக்கும் விதமாக ‘இந்து நேசன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இந்த முறை, அவரது முக்கிய இலக்குகள் எம்.கே.டி., நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணன், மற்றும் இயக்குநர்-தயாரிப்பாளர் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் ஆவர். எம்.கே.டி.யையும் அவரது இணை நடிகையான எம்.ஆர். சந்தானலட்சுமியையும் இணைத்து லட்சுமிகாந்தன் அடிக்கடி கிசுகிசுக்களை எழுதினார். இதனால், அவர் திரையுலகிற்கு ஒரு பெரிய தலைவலியாக ஆனார். 1944 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி, லட்சுமிகாந்தன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வடிவேலு என்ற நபர் அவரது கழுத்தில் குத்தி காயப்படுத்தினார். லட்சுமிகாந்தனுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த ‘இந்து நேசன்’ பத்திரிகையின் புரூஃப்ரீடர் நாகலிங்கம்தான் இந்தச் செயலுக்கு முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் என்று தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்தக் காயம் உயிருக்கு ஆபத்தானதாக இல்லை. எனவே, காவல்துறையும் வழக்கை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் மீண்டும் தாக்கப்பட்டார்; ஆனால் இந்த முறை அதிர்ஷ்டம் லட்சுமிகாந்தன் பக்கம் இல்லை. நவம்பர் 8 அன்று, நாகலிங்கம் மற்றும் வடிவேலு மீதான வழக்கு குறித்து தனது வழக்கறிஞருடன் விவாதித்துவிட்டுத் திரும்பும்போது, லட்சுமிகாந்தனை அந்த இருவரும் மீண்டும் தடுத்து நிறுத்திக் குத்தினார்கள். இந்த முறை வயிற்றில் குத்தப்பட்டார். இதனால் காயமடைந்த அவர் விரைவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்து, அடுத்த நாள் அதிகாலையில் மரணமடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, நாகலிங்கம் மற்றும் வடிவேலு இருவரும் கைது செய்யப்பட்டனர்.அதே ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், 50 வயதான லட்சுமிகாந்தன் வேப்பேரி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டு புகார் அளித்துள்ளார். ‘லட்சுமிகாந்தனைக் கொல்வதற்கு எம்.கே.டி. ரூ. 2,500 தருவதாக உறுதியளித்தார்’ விரைவில், லட்சுமிகாந்தனின் “ஒழிப்பு” பற்றிய செய்தியை விவாதித்த ஒரு கடிதத்தை காவல்துறை கைப்பற்றியது. கடிதத்தை அனுப்பியவர் மற்றும் அதைப் பெற்றவர் அடையாளம் காணப்பட்டனர். கொலைச் சம்பவத்தில் எம்.கே.டி. என்.எஸ் கிருஷ்ணன், மற்றும் நாயுடு ஆகியோர் சம்பந்தப்பட்டிருந்ததாகவும், அவர்களது நம்பிக்கைக்குரிய கூட்டாளி இந்தக் கொலையைச் செய்ததாகவும் அவர்கள் சாட்சியம் அளித்தனர். கொலை நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்பட்ட ஜெயானந்தன் என்பவரை காவல்துறை அடையாளம் கண்டது. அவர் நடிகை மாதுரியின் சகோதரர். தனது சகோதரியைப் பற்றி லட்சுமிகாந்தன் தேவையற்ற விஷயங்களை எழுதியதால், அவர் அவர்மீது கோபத்தில் இருந்துள்ளார்.வழக்கின்போது, ஜெயானந்தனை அப்ரூவராக மாற்றி, அவர் சாட்சியம் அளித்தார். லட்சுமிகாந்தனைக் கொல்வதற்கும், பின்னர் வரவிருக்கும் வழக்குச் செலவுகளுக்கும் பணம் தருவதாக எம்.கே.டி.யும் கிருஷ்ணனும் உறுதியளித்ததாக அவர் கூறினார். தான் ஒருமுறை எம்.கே.டி. மற்றும் கிருஷ்ணனைச் சந்தித்ததாகவும், அப்போது காரியம் முடிந்தவுடன் சூப்பர் ஸ்டார் எம்.கே.டி அவருக்கு ரூ. 2,500 தருவதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறினார். 1944 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி, எம்.கே.டி. அவரது ‘ஹரிதாஸ்’ படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகு பகிரங்கமாகக் கைது செய்யப்பட்டார். அவருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் விரைவில் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தாலும், நீதிமன்றம் சில வாரங்களுக்குப் பிறகு அதை ரத்து செய்தது.எம்.கே.டி., என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனைநீதிமன்றத்தில், லட்சுமிகாந்தன் எம்.கே.டி. மற்றும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு எதிராக வெளியிட்ட அவதூறு கட்டுரைகள், அவரைக் குத்தப் பயன்படுத்தப்பட்ட கத்தி, பிரேதப் பரிசோதனை அறிக்கை, மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலருக்குப் பணம் கொடுத்ததைக் குறிக்கும் பாகவதரின் கணக்கு புத்தகம் ஆகியவை ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வழக்கில் இருந்து நாயுடு விடுவிக்கப்பட்ட நிலையில், 1945 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி எம்.கே.டி. மற்றும் என.எஸ்.கிருஷ்ணனுக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அவர்கள் மேல்முறையீடு செய்தும் பலனளிக்கவில்லை. அதன் விளைவாக, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு 30 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தனர்.நல்ல காரணங்களுக்காக நன்கொடைகள் வழங்க ஒருபோதும் தயங்காத ஒரு கொடையாளியான எம்.கே.டி. நிரபராதி என்று அவரது ரசிகர்கள் மற்றும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பெரிய பகுதியினர் நம்பினர். சிறையில் இருந்தபோதும், “இது என் தலைவிதியின் ஒரு பகுதி” என்ற மனப்பான்மையுடன் அவர் இருந்தார். இருப்பினும், கிருஷ்ணனின் மனைவி, நடிகை வி.ஏ. மதுரம், தொடர்ந்து வழக்கை நடத்தினார். இறுதியில், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால் இந்த முறை இதற்கு நேர்மாறாக நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர், வழக்கைத் தொடுத்த தரப்பின் சாட்சிகளைத் திறமையாக நம்பகத்தன்மையற்றதாக ஆக்கினார். வழக்கைத் தொடுத்த தரப்பின் ஆதாரங்கள் பலவீனமான அடித்தளத்தில் இருந்ததால், நீதிமன்றம் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டது. இறுதியாக, எம்.கே.டி.யும் கிருஷ்ணனும் விடுதலையாகி வெளியே வந்தனர்.எம்.கே.டி.யின் விடுதலை, வீழ்ச்சி மற்றும் மரணம்1947 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையாவதற்கு முன்பே, சூப்பர் ஸ்டார் டஜன் கணக்கான படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார். இருப்பினும், சர்ச்சைக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த வெற்றியை அவரால் மீண்டும் உருவாக்க முடியவில்லை. ‘ராஜ முக்தி’ (1948), ‘சியாமளா’, ‘அமர கவி’, மற்றும் ‘புது வாழ்வு’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தத் தவறின. அவர் கதாநாயகனாக நடித்த அவரது கடைசிப் படமான ‘சிவகாமியும்’ (1960) (இது மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது) அவரது முந்தைய படைப்புகளைப் போலப் பெரிய அளவில் மக்களை ஈர்க்கவில்லை.வழக்கின்போது அவர் அதிகப் பணத்தை இழந்தாலும், எம்.கே.டி-யின் சொத்துக்கள் அந்த இழப்புகளைவிட அதிகமாகவே இருந்தன. இந்து கோபனின் புத்தகத்தின்படி, அவர் மெர்சிடிஸ் பென்ஸ் காரை வைத்திருந்த முதல் தமிழ்த் திரைப்படக் கலைஞர் ஆவார். தவிர, அவர் வீட்டில் தலா 110 பவுன் எடையுள்ள இரண்டு தங்கத் தட்டுகளில் உணவு உட்கொள்வார். இன்றைய விலையில், ஒரு தட்டின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட ரூ. 98 லட்சம் இருக்கும். ‘புது வாழ்வு’ படத்துடன் அவரது நடிப்பு வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவடைந்தாலும், அதன் பிறகு அவரது வாழ்நாளில் எந்தப் படமும் வெளியாகவில்லை என்றாலும், அவர் ஒரு பாடகராக மக்களைத் தொடர்ந்து கவர்ந்தார்.எம்.கே.டி. 1959 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தனது கடைசி மூச்சை விட்டார். அவரது கடைசி நாட்களில், அவர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். அவர் மறைந்து ஆறு தசாப்தங்கள் கடந்த பின்னரும், எம்.கே. தியாகராஜ பாகவதரின் பெயர் தமிழ் சினிமா மற்றும் சென்னை வரலாற்றில் இன்றும் பிரகாசமாக ஜொலிக்கிறது.